பிரதமர் மோடி, சமீபத்தில் உத்தரகாண்டில் இரண்டு ரோப் வே திட்டங்களுக்க்கு அடிக்கல் நாட்டினார். அதில் ஒன்று கோவிந்த்காட் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் இடையேயான ரோப்வே திட்டம். இதற்கு உலக அளவில் உள்ள சீக்கிய மற்றும் பஞ்சாபி சமூகத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளோபல் பஞ்சாபி சங்கம், பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது. இதேபோல, இங்கிலாந்தைச் சேர்ந்த சமூக சேவகர் குல்வந்த் சிங் தலிவால், கர்னல் ஜெய்பன்ஸ் சிங் (ஓய்வு), செயலாளர் ஜி.பி.ஏ செயலாளர் டாக்டர் ஜஸ்விந்தர் தில்லான், தொழில்முனைவோர் மற்றும் ஜி.பி.ஏ உறுப்பினரான அஜய்வீர் லால்புரா உள்ளிட்ட பலர், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது, சீக்கியர்கள், தங்களது ஹேம்குந்த் சாஹிப் புனித யாத்திரையின் போது, குருத்வாரா கோவிந்த் காட்டில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கி, குருத்வாரா கோபிந்த் தாமில் இரவு தங்கி, மறுநாள் ஹேம்குந்த் சாஹிப்பை அடைகிறார்கள். இது மூன்று நாள் எடுத்துக்கொள்ளும் மிகக் கடினமான பயணம். இதனால் வயதானவர்களால் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடிவதில்லை. தற்போது அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த 12.4 கி.மீ நீளமுள்ள ரோப்வே திட்டம், கோவிந்த்காட்டை ஹேம்குந்த் சாஹிப்புடன் இணைக்கும். அதன் பயண நேரத்தை சுமார் 45 நிமிடங்களாக குறைக்கும். மேலும், இது பிண்ட் புல்லானா, குருத்வாரா கோபிந்த் தாம் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் கங்காரியா ஆகிய இடங்களையும் இணைக்கும்.