மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை நடத்தும் ஆயுதப்படைகளின் கொடி நாள் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு மாநாட்டின் நான்காம் பதிப்பு டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். முன்னாள் ராணுவ வீரர்கள், விதவைகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் நலனிற்காக முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைப்பது மற்றும் இந்த நடவடிக்கைகளுக்கு பெரு நிறுவன சமூகப் பொறுப்பு ஆதரவைத் திரட்டுவது உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்த விழாவின் போது ஆயுதப்படைகளின் கொடி நாள் நிதிக்கான புதிய இணையதளத்தை அமைச்சர் தொடங்கி வைப்பார். இணைய வழியாக நிதி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளின் கொடி நாளுக்கான இந்த வருட பிரச்சாரத்தின் பாடலை ராஜ்நாத் வெளியிடுவதோடு, நிதி உதவி அளித்த முக்கியஸ்தர்களையும் கௌரவிப்பார். மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமானே மற்றும் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.