பாரதத்தின் வருடாந்திர சர்வதேச தொழில்நுட்ப மாநாடு டெல்லியில் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, மத்திய தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்துகிறது. ‘தகவல் தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல்’ எனும் கருப்பொருளில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் பாரதம் வளரும். இந்த விஷயத்தில் சில முக்கியமான கேள்விகளும் இருக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த நமது தகவல்கள் எங்கே இருக்கின்றன? அவற்றை யார் சேகரிக்கிறார்கள்? பராமரிக்கிறார்கள்? அந்த தகவல்களைக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள்? இதுபோன்ற முக்கியமான கேள்விகள் விஷயத்தில் கடந்த 2 ஆண்டுகளாகத்தான் நாம் விழிப்படைந்திருக்கிறோம். இன்றைய புவிசார் அரசியலில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது அணு ஆயுதம், இணையம், விண்வெளி உள்பட பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் கடந்த காலங்களில் இருந்ததைவிட பெரிய தொழில்நுட்ப மாற்றம் திடீரென ஏர்பட்டுள்ளது. இது கொள்கை மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது” என தெரிவித்தார்.