கேசரி வார இதழின் 71வது ஆண்டு விழா

0
106

கேரள மாநிலம் கோழிக்கோடு கேசரி பவனில் ‘கேசரி’ மலையாள வார இதழின் 71வது ஆண்டு விழா மற்றும் ஊடக கருத்தரங்கை ஆளுநர் ஆரிப் முகமது கான் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “விஷ்வ குரு என்ற இலக்கை நோக்கி பாரதம் வேகமாகச் சென்றுகொண்டிருந்தாலும், நமது பெரும்பாலான ஊடகங்கள், காலனித்துவ ஹேங் ஓவரால் பாதிக்கப்பட்டுள்ளன. எந்தத் திருப்பமும் இல்லாமல் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதே ஊடகங்களின் தர்மம். அவர்கள் நடக்கும் சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது இந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். அரசியல் மற்றும் நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அவர்கள் அடிபணியக் கூடாது. அவர்கள் அமைதி மற்றும் மன சமநிலையை விட்டுவிடக்கூடாது. விஷயங்களைத் திரிக்கக் கூடாது; அது வாசகர்களையும் பார்வையாளர்களையும் தவறாக வழிநடத்தக்கூடாது. “சர்வபூதங்களின் நன்மைக்காக எப்போதும் உண்மையைப் பேசுங்கள்” என மகரிஷி நாரதர் கூறியுள்ளார்.

மகாபாரதத்தின் சஞ்சயன் தான் முதல் நேரலை நிருபர். சண்டையிடும் இரு பிரிவுகளில் ஒன்றின் தந்தையான திருதராஷ்டிரனிடம் போர்க்களத்தில் நடக்கும் சம்பவங்களை விளக்கிக் கொண்டிருந்தான். அப்படியிருந்தும், அவர் அரசரை திருப்திப்படுத்த முயலவில்லை. உள்ளதை உள்ளபடியே கூறினார். சஞ்சயன் ஒரு தனிமனிதன் அல்ல, தர்மத்தின் உருவம் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். பாரதிய சூழ்நிலையில் பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான பத்திரிகையே ஜனநாயகத்தின் முதுகெலும்பு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சில அரசியல் கட்சிகள் மற்றும் வேறு சில குழுக்களின் தேச விரோத நலன்களுக்கு ஊடகங்களில் ஒரு சில அடிபணிந்தன. சிலர் அவர்களுக்காக செய்திகளை உருவாக்குகிறார்கள், அதற்கான வெகுமதிகளையும் பெற்றுக்கொள்கிறார்கள். இது ஒரு ஆபத்தான நிலை. ஆனால், கேசரி அப்படிப்பட்டவர்களைத் திருத்தும் சக்தியாகச் செயல்படுகிறது. அதுதான் கேசரியின் அழகும் பெருந்தன்மையும்.

அரசின் கொள்கை அல்லது நடவடிக்கைகளில் நான் தலையிட்டது நிரூபிக்கப்பட்டால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அதே நேரத்தில், அரசியலமைப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி வரையறுக்கப்பட்டுள்ள எனது கடமைகளில் அரசு பலமுறை தலையிட்டுள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல்கலைக் கழகங்களின் சுயாட்சியை மீண்டும் பெற வழி வகுக்கும். தீர்ப்புகள் நம்பிக்கையின் வெள்ளிக் கோடுகள். ஆளுநராக நான் புதிதாக எதையும் செய்யவில்லை, இழந்த பொறுப்புகளை காப்பாற்றி வருகிறேன்” என்றார்.

ஹிந்துஸ்தான் பிரகாஷன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான வழக்கறிஞர். பி.கே. ஸ்ரீகுமார், நிகழ்ச்சிக்குதலைமை வகித்தார். பிரபல கல்வியாளர் மற்றும் முன்னாள் தூதுவர் டி.பி. ஸ்ரீனிவாசன், என்.ஐ.டி காலிகட் இயக்குநர் பேராசிரியர் பிரசாத் கிருஷ்ணா, பிரஜ்னபிரவா தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜே. நந்தகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக சரஸ்வதி தேவி சிலைக்கு ஆளுநர் ஆரத்தி காட்டினார். டி.பி. ஸ்ரீனிவாசன் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து “தற்கால காலகட்டத்தின் ஊடக தர்மம்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here