1. 1901, ஜனவரி 8-ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது.
2. தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை.
3. தந்தை பொன்னுசாமி கிராமணியாருக்கு தமிழின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் இருந்த காதலால் தான், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெயரைத் தன் மகனுக்கு இட்டார்.
4. சென்னை மாநகராட்சியிலும், பல்வேறு துறைகளில் தலைவராகவும், மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மகரிஷி மகேஷ்யோகியின் அமைப்பைத் தென்னாட்டில் பரப்பும் பணிக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றித் தமது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியவர்.
5. தமிழக அரசால் ‘கலைமாமணி’ விருதையும் மத்திய அரசால் ‘பத்மபூஷண்’ விருதையும் பெற்ற பேராசிரியர் தெ.பொ.மீ. வரலாறு, அரசியல், சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர்.
6. 1923-ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1923-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். எனினும் தமிழ் கற்பிக்கும் பேராசிரியராகவே இவர் பணி பின்னாளில் தொடர்ந்தது. 1924-ல் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகப் பணியாற்றினார். 1925-ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் 1934-க்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941-ல் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.
7. தமிழ் படித்தவர்கள் தமிழ்மொழியை மட்டுமே கற்க முடியும், பிற மொழிகள் அவர்களுக்கு வராது என்பதை மாற்றி, மொழியியல் என்ற புதிய துறையின் புதுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்து அதை வளரச்செய்த முதல் முன்னோடி பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ.தான்.
8. உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை ‘நாடகக் காப்பியம்’ என்றும் ‘குடிமக்கள் காப்பியம்’ என்றும் ஒரு வரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.
9. “தமிழ்மொழி உயர வேண்டுமானால் தமிழன் உயரவேண்டும்” எனச் சங்கநாதமிட்ட முதல் சான்றோர் தெ.பொ.மீ. தன்னலம் கருதாத மாமனிதர் தெ.பொ.மீ.இவரது எழுத்துகள் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமையும் புகழும் சேர்ப்பன.