சிறுதானியங்கள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் 2023 : 3 நாள் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி பெங்களூருவில் தொடங்கியது

0
71

சிறுதானியங்கள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் 2023 என்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சி பெங்களூருவின் திரிபுரவசினியில் ஜனவரி 20 வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, கண்காட்சி, அரங்கம் வணிகத்திலிருந்து வணிகத்திற்கான கட்டமைப்பு தொடர்பு என பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கண்காட்சிப் பிரிவை கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்நாடக அரங்கத்தை நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி திறந்துவைத்தார். வணிகத்திலிருந்து வணிகத்திற்கான தொடர்புப் பிரிவை மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி தொடங்கிவைத்தார்.

விவசாயிகள், உழவர் குழுக்கள், உள்ளூர் மற்றும் விளையாட்டு நிறுவனங்கள், சிறு தானியம் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் தொடர்பான மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு இந்த வர்த்தகக் கண்காட்சி சிறந்த தளமாக அமைந்துள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை, உணவுப்பதப்படுத்துதல், வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய இந்தக் கண்காட்சி உதவிகரமாக அமையும்.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கருத்தரங்கை மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் திருமதி ஷோபா கரந்தலாஜே தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், குறைந்த அளவில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, சிறுதானியங்களை பயிரிட்டால் அதை சர்வதேச தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் இதன் மூலம் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற இயலும் என்றும் தெரிவித்தார். விவசாயிகளின் வருவாயைப் பெருக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகக் கூறிய அவர், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி மூலம் தற்போது விவசாயிகளின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

வேளாண்துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி பேசுகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு , வேளாண் துறைக்கான பட்ஜெட் நிதிஒதுக்கீட்டை 6 மடங்கு உயர்த்தியிருப்பதாகக் கூறினார். 10,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சிறு தானியங்களின் பயன்பாடு ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கும் என்று கூறிய அவர், விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரமும் இதன் மூலம் பெருகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட அரங்கங்கள், சிறுதானியங்கள் மற்றும் இயற்கை உணவுப்பொருட்களின் விற்பனை நிலையங்கள், வாங்குபவர் மற்றும் விற்பனையாளர் இடையிலான சந்திப்புக் கூட்டங்கள், சர்வதேச கண்காட்சி, கருத்தரங்கங்கள், விவசாயிகளுக்கான பயிலரங்கங்கள், சமையல் , ஓவியம் மற்றும் வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here