புதிய விடியலுக்குப் பின் ஜம்மு – காஷ்மீர்

0
1184
ஜம்மு – காஷ்மீர் கடந்த 5 ஆண்டுகளாக துரிதமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களால் வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளது. பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது. மக்கள் பாரபட்சமாக நடத்தப்பட்ட அவலம் முடிவுக்கு வந்துள்ளது. அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. இயல்புநிலை திரும்பியுள்ளது, நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
 
ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 90 தொகுதிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும். ஜம்முவிலும் காஷ்மீரிலும் சம அளவில் தொகுதிகள் இருக்கும். இதன்படி பார்த்தால் ஜம்முவில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். அரசியல் சாஸனப் பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை நீக்கியதையடுத்து பாரத அரசியல் சாஸனம் மற்ற மாநிலங்களில் அமலாக்கப்படுவதைப் போல ஜம்மு – காஷ்மீரிலும் அமலுக்கு வந்துவிட்டது.
 
ஜம்மு – காஷ்மீரில் ஏறத்தாழ சம அளவில் உள்ள பெண்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள். இந்த அரசியல் ரீதியான ஏற்றத்தாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது. இதைப்போல, பட்டியலினத்தவர், மேற்குபாகிஸ்தானைச் சேர்ந்த அகதிகள், கூர்க்காக்கள், பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் இப்போது சம உரிமைகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள் நிரந்தர குடியுரிமையை பெற்றுவிட்டார்கள்.
 
ஏற்றத்தாழ்வின்மை நிலைநாட்டப்பட்டுவிட்டது. சமத்துவம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. சமவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பாரதத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கதுவா மாவட்ட நீர்ப்பாசனத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, உஜ் நீர்மின் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.6,000 கோடி செலவாகும். உஜ் ஆறு, ராவி நதியின் கிளை ஆறாகும். இத்திட்டத்தின் வாயிலாக 6.5 லட்சம் ஏக்கர் அடிகள் தண்ணீரை தேக்கி வைக்கமுடியும்.
 
மற்ற மாநிலங்களுக்கும் ஜம்மு – காஷ்மீருக்கும் இடையிலான சுவர் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் குடியேறலாம், நிலம் வாங்கலாம், அங்கேயே தங்கி நிரந்தர குடிமக்களாக வாழலாம்.2019ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் 7வது ஊதியக்குழு பரிந்துரை அமலாக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜம்மு – காஷ்மீர் குடிமைப்பணி, ஏ.ஜி.எம்.யூ.டி. பணி நிலையுடன் சேர்க்கப்பட்டுவிட்டது. அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு – காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டபோது 51.7 சதவீதம் வாக்கு பதிவானது. இது குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவாகும். முதல் முறையாக 100 பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இப்போது தான் முதல்முறையாக பெண்களுக்குஇட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 280 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 20 மாவட்ட தலைவர்கள் ஆகியோரும் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
அரசியல் ரீதியாக இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட தேர்தலில் ஆறு பெண்கள், மாவட்ட தலைவர்களாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந் தது. மொத்தமுள்ள 20 மாவட்டங்களில்2 தலைவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் கள்; 2 தலைவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.காஷ்மீர் வரலாற்றிலேயே இப்போதுதான் முதல் முறையாக வன்முறை, துப்பாக்கிச்சூடு இல்லாத வகையில் அமைதியாக தேர்தல்நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 280 இடங்களுக்கு 2,178 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 450 பேர் பெண்களாவர். பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள குஜ்ஜார் பக்கன்வால்ஸ் சமூகத்தைச் சேர்ந்த 38 பேர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த ஜூன் 1ம் தேதியன்று உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றிவர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த ஆண்டும் அவர்களுக்கு மேலும் ரூ.1,000 கோடி பட்டுவாடா செய்யப்படும். 17 மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 21 துறைகள் பஞ்சாயத்துகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்களின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,500 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
புலம் பெயர்ந்த காஷ்மீர் ஹிந்துக்களுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 6000 அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜம்மு–காஷ்மீருக்கான 20-20-21 பட்ஜெட்டில் ரூ.1,08,621 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் வளர்ச்சிக்கான செலவு ரூ.39,817 கோடி.உத்தம்பூர் – பாரமுல்லா ரயில்பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது அடுத்தாண்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும். 3,300 மெகாவாட் மின் சக்தியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. நிகழாண்டு மார்ச் வரை பிரதம மந்திரி ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 29,429 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 2019–20ல் 6 லட்சம் மக்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் சட்டம், ஒழுங்கு இயல்பு நிலையை எட்டிவிட்டதாலேயே இது சாத்தியமாகியுள்ளது.
 
இ-ஆபிஸ் (மின் அலுவலகம்) திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் கோப்புகளில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட பக்கங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இது ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்தில் முக்கிய மைல்கல்லாகும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 500 கோடி மிச்சமாகிறது. ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கும் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கும் கோப்புகளை தூக்கிச்செல்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுவிட்டது. பள்ளிக்கூடங்களில் பயிலும் குழந்தைகளின் நெஞ்சங்களில் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை ஆழமாகப் பதியவைக்கும் பொருட்டும் அதற்குமரியாதை அளிக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கும் பொருட்டும், 23,111 அரசு பள்ளிக்கூடங்களில் மூவர்ண பின்புலத்தில் பள்ளிக்கூடம் சார்ந்த தகவல்கள் பலகையில் எழுதப்பட்டுள்ளன.
 
பிரதம மந்திரி சிறப்பு நிதிச் சலுகைதொகுப்பின் கீழ், ஜம்மு – காஷ்மீர் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ரூ.80 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. முடங்கிக் கிடந்த திட்டப்பணிகள் முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஐ.ஐ.டிக்கள், ஐ.ஐ.எம்.கள், எய்ம்ஸ் மருத்துவ மனைகள் உள்ளிட்டவை அடங்கும். காஷ்மீரில் உள்ள வீடுகளுக்கு குழாய் வாயிலாக தண்ணீர் வழங்குவது அரிதிலும் அரிதாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் 11 லட்சம் வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டுவிடும். இதற்காக மத்திய அரசு ரூ. 10,500 கோடியை அளித்துள்ளது.
 
ஜம்மு பகுதியில் ஒன்று, காஷ்மீர்பகுதியில் ஒன்று என மொத்தம் இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் 750 படுக்கை வசதி கொண்டதாக இருக்கும். தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கும் லத்தாக்குக்கும் ரூ. 520 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு செப்டம்பரில் கிராமங்களில் உள்ள எல்லா வீடுகளுக்கும் அதாவது 18.16 லட்சம் இல்லங்களுக்கும் குழாய் வழியே தண்ணீர் விநியோகிப்பது உறுதி செய்யப்பட்டுவிடும். 2021 மார்ச்சில் 2 மாவட்டங்களில் இது பூர்த்தியடைந்துவிட்டது. அடுத்தாண்டு மார்ச்மாதத்திற்குள் மேலும் ஒன்பது மாவட்டங்களில் இது நிறைவடைந்துவிடும். எஞ்சிய ஏழு மாவட்டங்களில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் பணி நிறைவடையும்.
 
பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் 2020 – 21ல் ஜம்மு – காஷ்மீரில் 5,300 கி.மீ தொலைவுக்கு சாலை போடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏ.பி – பி.எம்.ஜே.ஏ.ஒய் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஜம்மு – காஷ்மீரில் உள்ள அனைவருக்கும் இலவச காப்பீட்டுத் திட்டம் ரூ.5 லட்சம் அளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் குடிமக்களுக்கான காப்பீட்டுத் தொகையை அவர்களுக்காக அரசே செலுத்திவிட்டது. இத்திட்டம் வருங்காலத்திலும் தொடர்ந்து அமலாக்கப்படும்.
 
-நிகரியவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here