ஆங்கிலேய சிறையில் அவரை பார்க்க சிறைத்துறை அனுமதியுடன் ஒல்லியான இளைஞர் வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவர் முகத்தில் புன்னகை; மற்றவர் கண்களில் கண்ணீர் அரும்பியது. “தங்கள் தரிசனத்திற்கு வந்திருக்கிறேன்… நான் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?” என்றார் பார்க்க வந்தவர். சிறைக்குள் இருந்தவரோ, “ஒரு சீப்பு தரமுடியுமா? நாளை என் மணப்பெண்ணை முத்தமிடுகையில் கலைந்த தலையுடன் இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார். சீப்பும் சில தாள்களும் கைமாறின.
மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் பெருமிதத்துடனும் விடைபெற்ற அந்த மனிதர் வீர சாவர்க்கர்.
தேசபக்தர்களுக்கு கடுமையான தண்டனைகள் ஆங்கிலேய அரசு வழங்கி வந்தது. அந்தத் தண்டனைகளில் முக்கிய பொறுப்பதிகாரி கர்ஸன் வில்லி. அவர் இந்திய இம்பீரியல் சென்டரில் நடக்கும் கூட்டத்தில் அவன் கலந்து கொள்வதாக இருந்தது.
அந்தக் கூட்டத்திற்கு வந்த மதன்லால் திங்க்ரா, கர்ஸன் வில்லியை நேருக்கு நேராகச் சுட்டு எமனுலகு அனுப்பினார். கூட்டம் சிதறி ஓடியது. திங்க்ரா காவலர்கள் வரும்வரை நின்றார். அதனை குறித்து பத்திரிகையாளர்கள் எழுதியபோது, அந்தக் கூட்டத்திலேயே அமைதியுடன் காணப்பட்டது திங்க்ரா மட்டும்தான். திங்க்ரா நினைத்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அதனைச் செய்யவில்லை. லண்டனிலேயே பாரதத்தின் தேசியத்தின் சிங்க முழக்கத்தைக் கேட்கச்செய்துவிட்டார்’ என்றனர்.
ஆங்கிலேய ராஜ்ஜிய விவகாரத்துறையில் உயர்பதவி வகித்த பிரிட்டிஷ் கவிஞர் வில்ப்ரைய்ட் ஸ்காவென் ப்ளண்ட், “எந்த ஒரு கிறிஸ்தவ இறைசாட்சியும் தனக்கு எதிரான தீர்ப்பினை இத்தனை அச்சமின்மையுடன் எதிர்நோக்கியதில்லை. பாரதம், இவரைப் போல 500 இளைஞர்களை உருவாக்கினால் நிச்சயமாக விடுதலை அடைந்துவிடும்” என்றார். விசாரணையின்போது மதன்லால் திங்க்ராவின் நாடித்துடிப்புகூட இயல்பாகவே இருந்ததை மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மதன்லால் திங்க்ராவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து டைம்ஸ் பத்திரிகை எழுதியது: “தண்டனை அறிவிக்கப்பட்டபோது அவரிடம் எந்த சலனமும் இல்லை. இது அவரது மேன்மைக்குச் சாட்சியாக அமைந்தது. விசாரணைக் கூண்டிலிருந்து திங்க்ரா புன்னகையுடன் வெளியேறினார்.”
ஒரு கிறிஸ்தவ பாதிரி அவருக்காக பிரார்த்தனை செய்ய முன்வந்தார். “நான் ஒரு ஹிந்து; உங்கள் பிரார்த்தனை எனக்குத் தேவையில்லை” எனப் புன்னகையுடன் மறுத்துவிட்டார் திங்க்ரா.