தமிழக பாரம்பரிய கிராமிய கலைகளை ஆவணப்படுத்தி, சர்வதேச மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒளிப்பட காட்சியாக பதிவு செய்ய, கலை, பண்பாட்டுத் துறை முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் கரகம், காவடி, ஒயில், சிலம்பம், தப்பாட்டம், மான்கொம்பு, பறையிசை உள்ளிட்ட கிராமிய கலைகள் 100க்கும் அதிகமாக உள்ளன. பழங்கால தமிழர் வாழ்வியல் முறையில், இத்தகைய கலைகள் பிணைந்திருந்தன. கலையின்றி சமுதாய சூழலும் இல்லை. தமிழகத்தின் அடையாளமாக திகழ்ந்த கலைகளால், கலைஞர்களும் நிறைந்து, வாழ்வாதாரமும் வளமாக இருந்தது. தற்கால நவீன வாழ்வியல் சூழலில், இக்கலைகள், தமிழர் வாழ்வியலிலிருந்து விலகி மறைந்து வருகிறது.
தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை என குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே, மிக குறைவான கலைஞர்கள் வசித்து, இக்கலைகளை நிகழ்த்துகின்றனர். இச்சூழலில் தமிழக கலை, பண்பாட்டு துறை, தமிழரின் அனைத்து பாரம்பரிய கலைகளையும் வீடியோ காட்சிப்பதிவாக ஆவணப்படுத்தி, சர்வதேச மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது.