ராணி துர்காவதி

0
614

ராணி துர்காவதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிற்றரசான கோண்ட்வானா தேசத்தை ஆண்டவர். ராணியின் கணவரும் அரசருமான தல்பத் ஷா 1548ல் இறந்த பிறகு, தனது சிறு குழந்தை பீர் நாராயணனை அரசராக்கி தனது மகனுக்குத் துணையாக 1548 முதல் 1564 வரை பதினாறு வருடங்கள் சாமர்த்தியத்துடன் ஆட்சியை நடத்தினார் ராணி துர்காவதி.

கோண்ட்வானா மீது அக்பரின் தளபதி ஆசாப் கான் போர் தொடுத்தான். அவனது தாக்குதல், படை வலிமை குறித்து தனது திவான் சுட்டிக்காட்டிய போதிலும், ராணி தன் ராஜ்யத்தை முழுசக்தியுடனும் பாதுகாக்க முடிவு செய்தார். முகலாய தரப்பில் நவீன ஆயுதங்களுடன் ஏராளமான பயிற்சி பெற்ற வீரர்கள், ராணி படையில் பழைய ஆயுதங்களுடன் சிறிதே போர் பயிற்சி பெற்ற குறைந்த அளவிலான வீரர்களுடன் சமமற்ற போராக அது இருந்தது.

போரில் அவரது படைத்தளபதி அர்ஜுன் தாஸ் கொல்லப்பட்டார். ராணி இறுதி தாக்குதலுக்கு தானே தலைமை ஏற்றார். எதிரியின் படைகளுக்குள் நுழைந்து ராணியின் வீரர்கள் தாக்கினர். ஆனால் அதில் ராணியின் படை அதிக சேதமடைந்தது. ராணி தனது ஆலோசகர்களுடன் களநிலவரத்தை மதிப்பாய்வு செய்தார். இரவில் எதிரிகளை அதிரடியாக தாக்க விரும்பினார். ஆனால் தளபதிகள் அந்த யோசனையை ஏற்கவில்லை.

அடுத்த நாள் காலையில் அசாப்கானின் நவீன துப்பாக்கிப் படைகள் வந்த்திருந்தன. ராணி யானை மீதேறி போருக்கு வந்தார். அவரது மகன் வீர் நாராயணனும் போரில் பங்கேற்றார். அவர் முகலாய ராணுவத்தை மூன்று முறை பின்வாங்குமாறு தீரமுடன் போரிட்டார். ஆனால், கடைசியில் காயமடைந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டிதாயிற்று.

ராணியும் மோசமாக காயமடைந்தார். ஒரு அம்பு அவர் கழுத்தில் குத்தியதால் சுயநினைவை இழந்தார். சுயநினைவைப் பெற்றவுடன், தோல்வி உறுதி என்பதை உணர்ந்தார். போர்க்களத்தை விட்டு வெளியேற மெய்காப்பாளர்கள் அறிவுறுத்தினர். ஆனால், தோற்று உயிர்பிழைத்து வாழ்வதை விட மரியாதையுடன் போர்களத்தில் போராடி இறப்பது நல்லது என்று ராணி கூறி ஒரு கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு உயிர் துறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here