சூரிய சக்தியால் முழுமையாக இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமையை பெற்றது கேரளாவின் கொச்சி விமான நிலையம். இதனையடுத்து புதிய முயற்சியாக, நீர் மின் ஆற்றல் உற்பத்தியில் இறங்கியுள்ளது கொச்சி விமான நிலையம். இதற்காக, இருவழிஞ்சி ஆற்றின் குறுக்கே ஒரு அணையையும், கோழிக்கோடு மாவட்டத்தில் அரிப்பாராவில் ஹைட்ரோ மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரோ மெக்கானிக்கல் அமைப்புகளையும் கட்டி நீர் மின் நிலைய பணியை துவக்கியுள்ளது. 4.5 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 14 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 44 ஆறுகளும் ஏராளமான நீரோடைகளையும் கொண்ட கேரள மாநிலம் முழுவதும் இதுபோன்ற ஹைட்ரோ திட்டங்களை அமைப்பதற்கு இந்த முயற்சி உத்வேகத்தை அளித்துள்ளது. இதைத்தவிர, கடந்த ஜனவரியில் 452 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக மிதக்கும் சூரிய மின் ஆற்றல் ஆலையை கொச்சி விமான நிலையம் நிறுவியது குறிப்பிடத்தக்கது.