தேசத்தின் சமூக, அரசியல், கலாசாரச் சூழலில் மாற்றம் நிகழ்த்திய பாரதிய சிந்தனையாளர்களுள் அமரர் தத்தோபந்த் தெங்கடிக்கு முதன்மையானவர்.
படிக்கும் காலத்திலேயே விடுதலைக்காகப் போராடியவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாரகராக 50 ஆண்டுகள் தேசத்துக்காகவே வாழ்ந்தவர். ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க அனுபவத்தைக்கொண்டு அவர் நிறுவிய அமைப்பே இன்று உலக அளவில் புகழ் பெற்றதும், தேசிய அளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்டதுமான பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்).
இதைத் தவிர விவசாயிகளுக்கான ‘பாரதீய கிசான் சங்கம்’, சுதேசி பொருளாதார சிந்தனைக்கான ‘ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச்’, சமூக ஒருமைப்பாட்டு அமைப்புகளான ‘சமாஜிக் சமரஸதா மன்ச்’, ‘சர்வபந்த் சமாதார் மன்ச்’ ஆகிய அமைப்புகளை நிறுவியவரும் தெங்கடியே. மாணவர்களுக்கான அமைப்பான ‘அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்’ (ஏ.பி.வி.பி.) நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.
பாரதீய ஜனசங்கம் துவங்கப்பட்டபோது அதன் நிறுவன உறுப்பினராகவும் செயல்பட்டார். அவர் தொட்ட அமைப்புக்கள் எல்லாம் துலங்கியது. சோவியத் வல்லரசு பல துண்டாகச் சிதறும் என்று கணித்தவர்.
பாரதத்தின் குடும்ப அமைப்பு முறையும், ஆதிக்கம் செலுத்தாத உலகம் தழுவிய தத்துவக் கோட்பாடுகளும் எதிர்காலத்தில் வழிகாட்டும் என்பதே அவரது சிந்தனைகளின் அடிநாதம்.
டாக்டர் அம்பேத்கர் மும்பையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு தேர்தல் முகவராக பணியாற்றி இருக்கிறார். அரசு அளித்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பொறுப்பு, பத்மபூஷண் விருதைப் பெற பணிவுடன் மறுத்தவர் தெங்கடி.
தத்தோபந்த் தெங்கடியின் பிறந்தநாள் இன்று