பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த பிப்ரவரி மாதம் இறந்தார். ‘பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும், லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்படும்’ என, ‘மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்டாதன்’ அறக்கட்டளை அறிவித்தது.
லதா மங்கேஷ்கரின் தந்தை தீனாநாத் மங்கேஷ்கரின் 80வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் சாதனையை போற்றும் வகையில், அவருக்கு முதல் லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டது. நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமரின் பங்களிப்பை கவுரவிக்கும் நோக்கில், இந்த விருது வழங்கப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.விருதை பெற்ற பிரதமர் மோடி கூறுகையில், ”வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்காக, லதா மங்கேஷ்கர் கனவு கண்டார்; நாட்டின் வளர்ச்சிக்கும் அவர் பங்களித்தார். அவர் பெயரில் விருது பெருவதை நன்றியுடனும், பணிவுடனும் ஏற்றுக் கொள்கிறேன்,” என்றார்.