ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட்டில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஜலோரி கேட் சந்திப்பில் இந்துக் கொடியை அகற்றி முஸ்லீம் கொடியை நிறுவுவதில் தகராறு தொடங்கியது. ஜலோரி வட்டம் அருகே பேனர் வைக்கப்பட்டு, ஒலிபெருக்கி பொருத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் பால் முகுந்த் பிஸ்ஸாவின் சிலை மீது கொடி ஏற்றப்பட்டு, ஜலோரியில் உள்ள வட்டத்தில் ரமலான் தொடர்பான பேனர் கட்டப்பட்டதை அடுத்து, ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடி மற்றும் பேனரை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மற்ற சமூகத்தினர் ஆத்திரமடைந்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இரு சமூகத்தினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதனைத்தொடர்ந்து மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.