டெல்லி மே 6 முதல் 15 வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், ‘தயா’ என்ற சமஸ்கிருத திரைப்படம் திரையிடப்பட்டது. 1905ல் கேரளத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது இந்தத் திரைப்படம். ஆணாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய குறியேடத்து தாத்திரி என்ற நம்பூதிரி பெண்ணின் கதையைச் சொல்லும் இத்திரைப்படத்தில், மலையாள நடிகை அனுனோல், நடிகர் நெடுமுடி வேணு, வாசுதேவன் நம்பூதிரி உட்பட பலர் நடித்துள்ளனர். “பாரதத்தின் பிற மொழிகளைப் போன்றே சமஸ்கிருத மொழியையும் மேம்படுத்த வேண்டியது அவசியம்” என்று கூறும் இப்படத்தின் இயக்குநரான முனைவர் ஜி.பிரபா, சென்னை லயோலா கல்லூரியில் சமஸ்கிருத துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2016ம் ஆண்டு ‘இஷ்டி’ என்ற சமஸ்கிருத திரைப்படத்தின் மூலம் இயக்குநராக இவர் அறிமுகமானார். இதுவரை, கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச திரைப்பட விழா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா, நாக்பூர் ஆரஞ்சு சிட்டி சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘தயா’ திரையிடப்பட்டுள்ளது.