ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இ.பி.எப்.ஓ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 15.32 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். இது, அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.47 லட்சம் சந்தாதாரர்கள் அதிகம். மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், குஜராத், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றன. இந்த மாநிலங்களில் மட்டும் தோராயமாக 10.14 லட்சம் சந்தாதாரர்கள் மார்ச் மாதத்தில் இணைந்துள்ளனர். மொத்த சந்தாதாரர்களில் இது 66.18 சதவீதமாகும். புதிதாக சேர்ந்த 15.32 லட்சம் சந்தாதாரர்களின் 9.68 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள். இவர்கள் முதல் முறையாக இ.பி.எப்.ஓவில் இணைந்துள்ளனர். இது முந்தைய மாதத்தை காட்டிலும் 81,327 அதிகமாகும். சுமார் 5.64 லட்சம் சந்தாதாரர்கள், அமைப்பில் இருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்துள்ளனர். இவர்கள் முந்தைய கணக்கில், தற்போதைய பி.எப் கணக்கை இணைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.