உலகில் வலுவான ராணுவ படை பலத்தில் பாரதம் 4வது இடத்தில் உள்ளது என தி மிலிட்டரி டைரக்ட் என்கிற சர்வதேச பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் இணையதளம் மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தி வேர்ல்டு டைரக்டரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி ஏர்கிராஃப்ட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வலிமையான விமானப்படையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தில் இந்திய விமானப்படை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப்படை 242.9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதே அமெரிக்காவின் கடற்படையின் விமானப் பிரிவு 142.4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 3வது இடத்தில் 114.2 புள்ளிகளுடன் ரஷ்ய விமானப்படையும் உள்ளன. 4வது இடத்தில் 112.6 புள்ளிகளுடன் அமெரிக்க ராணுவத்தின் விமானப் பிரிவும், 5வது இடத்தில் 85.3 புள்ளிகளுடன் அமெரிக்க கடலோர காவல்படையும் உள்ளன. 69.4 புள்ளிகளுடன் இந்திய விமானப்படை 6வது இடத்தில் உள்ளது. பாரதத்தை விட அதிக போர் விமானங்களை கொண்டுள்ள சீனா 63.8 புள்ளிகளுடன் 7வது இடத்தில்உள்ளது. ஜப்பான் 8வது இடத்திலும், இஸ்ரேல் 9வது இடத்திலும், பிரான்ஸ் 10வது இடத்திலும் உள்ளன. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் அந்தந்த நாடுகளின் பட்ஜெட், ராணுவ வீரர்களின் செயலாற்றல், நாட்டின் பரப்பளவு, கடல், நிலம், வான், அணு ஆயுத வளங்கள், படை வீரர்களின் சராசரி ஊதியம், பாதுகாப்பு தளவாட சாதனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புள்ளிகள் கணக்கிடப்பட்டுள்ளன. பாரத விமானப்படை வீரர்களின் செயலற்றலை அறிய விமானப்படை வீரர் அபிநந்தனின் சமீபத்திய சாகசம் ஒன்றே போதும். பழமையான பைசன் மிக் 21 விமானத்தில் பறந்த அபிநந்தன், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்த அதிநவீன எப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதுவரை எப் 16 விமானத்தை எந்த நாடும் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.