குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள நவ்லாகி மைதானத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், அங்குள்ள ஒரு சிறிய குளத்தின் அருகே, விநாயகர் , ஹனுமான் உள்ளிட்ட ஹிந்து தெய்வங்களின் சிலைகள் இடிபாடுகளில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஹிந்து தெய்வங்களின் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாநகராட்சி அந்த சிலைகளை உடனடியாக மீண்டும் நிறுவ வேண்டும் என பல்வேறு ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்த விசாரணையில் இந்த சிலைகள், பழைய பத்ரா சாலையில் மேம்பாலம் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட ஒருசில சிறிய கோயில்களுக்கு சொந்தமானவை என்று தெரியவந்தது. இந்த சர்ச்சையை அடுத்து, வதோதரா மேயர் கேயுர் ரொகாடியா மற்றும் நகராட்சி ஆணையர் ஷாலினி அகர்வால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். சிலைகள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டன. அவை, முறைப்படி மீண்டும் கோயில்களில் நிறுவப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். ஹனுமானின் சிலை தற்காலிகமாக தசாலியில் உள்ள ஷானிதேவ் கோயில் அருகே வைக்கப்படும் என்று கூறிய மேயர், சிலைகள் இருந்த இடத்திலேயே நிறுவப்படும் என தெரிவித்தார்.