பாரத நாட்டில் வரிச் சீர்திருத்தம்

0
361

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து, தனி நபரின் வரிச் சுமையை குறைக்கும் நோக்கில் நமது மத்திய அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு வரிச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றைய பொருளாதாரச் சூழலில் நமது வரிச் சீர்திருத்த முயற்சி எப்படி இருக்கலாம் என்பதைப் பற்றியே  இந்தக் கட்டுரை.                                                           

உலகத்தையே புறட்டிப் போட்ட கோவிட் 19 பெருந்தொற்றை, சாதனைச் சிற்பி பாரதப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு, நமது கற்பனைகளை மிஞ்சும் அளவிற்கு, மிகச் சிறப்பாகக் கையாண்டு, நம்மை பாதுகாத்துள்ளது என்பதை நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாது. கோவிட் 19 பரவலைத் தடுத்தது, பெருந்தொற்றின்  தாக்கத்தை எதிர்கொண்டு முறியடித்தது, களப்பணியாளர்கள் மற்றும் சாமானிய மக்களின் மனத் தயாரிப்பு, உலகத் தரம் வாய்ந்த தடுப்பூசிகளை நமது நாட்டு நிறுவனங்கள் தயாரிக்க உதவியது, உலக நாடுகளுக்கு தடுப்பூசி கொடுத்தது, நமது நாடு முழுவதும் தடுப்பூசி வினியோகம் செய்தது, போன்ற அனைத்துத் துறைகளிலும் நாம் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளோம். கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக நமது பாரத நாடு முழுவதும் நீண்ட காலத்திற்கு முழுமையான பொது முடக்கமும், லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நீண்ட தூரம் கால் நடையாக சொந்த ஊருக்குப் பயணிக்க நேர்ந்த துயரமான நிலையையும் நாம் கண்டோம். 80 கோடி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நமது பொது வினியோகத் திட்டத்தின் மூலம், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு மாதமும் இலவசமாக நாம் வழங்கி வருகிறோம். இதைப் போன்ற பல்வேறு காரணிகளால், நமது நாட்டின் பொருளாதாரத்திற்குப் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.                                       

138 கோடி மக்கள் தொகை கொண்ட நமது பாரத நாட்டில், சாமானிய தொழிலாளர்களில் 7% நபர்களும், பட்டப் படிப்புக்கு மேற்பட்ட கல்வியறிவுள்ளவர்களில் 19% நபர்களும் வேலையில்லமல் இருக்கின்றனர். நமது நாட்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த 5.78 கோடி நபர்களில், 1.46 கோடி நபர்கள் மட்டுமே ஆண்டிற்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவதாகக் கூறுகிறார்கள்! எவ்வளவு அரசாங்க கெடுபிடிகள் இருந்த போதும், நமது நாட்டில் வருமான வரி மற்றும் ஜி எஸ் டி வரி ஏய்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இதனால் மத்திய அரசாங்கத்திற்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஜி எஸ் டி வரி ஏய்ப்பவர்கள் மூலம் நமது பாரத அரசிற்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற விவரத்தை பின் வரும் அட்டவணையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.                          

     

 நிதி ஆண்டு 

                   நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

(கோடிரூபாய்)

   வசூலிப்பு

(கோடிரூபாய்)

       2016-17        10,212       23,618.52       6,107.88
       2017-18          6,815       32,204.49       4,579.94
       2018-19          8,917       48,555.06     13,907.83
       2019-20        10,657       40,853.27     18,464.00

 

கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் நமது மத்திய அரசாங்கத்தின் வரி வருவாய் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நாம் எவ்வளவு கடன் வாங்குகிறோம் என்பதையும் பின்கண்ட அட்டவணையின் மூலம் அறியலாம்.

    நிதி ஆண்டு வரி வருமானம் (கோடிரூபாய்) கடன் தொகை    (கோடிரூபாய்)
       2020-2021    14,26,287.08    18,83,104.87
         2021-2022    17,65,144.65    14,16,901.62
         2022-2023*    19,34,770.66    17,39,735.21

* மதிப்பீடு                                                                

2020-2021 ஆம் நிதி ஆண்டில் நமது மொத்த வரி வருவாயில் 132% அளவிற்கும், 2021-2022 ஆம் நிதி ஆண்டில் நமது மொத்த வரி வருவாயில் 80% அளவிற்கும், நடப்பு 2022-2023 ஆம் நிதி ஆண்டில் நமது மொத்த வரி வருவாயில் 89% அளவிற்கும் நாம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறது. 2022 மார்ச் மாத இறுதியில் நமது நாட்டின்  மொத்த கடன் தொகை   135,87,893.16  கோடியாகும். நடப்பு நிதி ஆண்டு 2022-2023 முடிவில் இந்தத் தொகை  152,17,910.29  கோடியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் நாம் இந்தக் கடனுக்கான வட்டியாக மட்டும் எவ்வளவு தொகை செலவிடுகிறோம் என்பதை பின்வரும் அட்டவணை தெரிவிக்கிறது.                                     

    நிதி ஆண்டு              வட்டித் தொகை

           (கோடிரூபாய்)

       2020-2021            6,79,868.58
         2021-2022               8,13,791.00
         2022-2023*            9,40,651.02

  

 

 

 

 

* மதிப்பீடு                                                            

நமது நாட்டின் பொருளாதாரம், தவிற்க இயலாத நிதிப் பற்றாக்குறை, கட்டுக்கடங்காத கடன் சுமை, ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரிக்கும் நாம் செலுத்த வேண்டிய வட்டித் தொகை, குறுகிய வரி செலுத்துவோர் தளம், வரி ஏய்ப்பவர்களால் கணிசமான வருவாய் இழப்பு, இவை அனைத்தையும் உள்ளடக்கிய, பல பரிணாமங்களைக் கொண்டதாக உள்ளது.                                  

பரந்து விரிந்த நமது பாரத நாட்டிற்கு, எளிமையான, சாமானிய மக்களால் புரிந்து கொள்ளக் கூடிய, வெளிப்படையான, ஊழலற்ற வரி வசூல் முறையே இன்றைய தேவை. ஜி எஸ் டி அமலாக்கத்தின் மூலம் நாம் வரிச் சீர்திருத்தத்தில் பல முன்னேற்றங்களை கண்டிருந்தாலும், இன்னும் சிறப்பான எளிமையான வரியே இன்றைய அவசரத் தேவை.  

 

கோவிட் 19 பெருந்தொற்றினால் நமக்கு ஏற்பட்ட ஏராளமான பிரச்சினைகளோடு கூட, நன்மையும் ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் சக மனிதர்களிடமிருந்து பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால், நாம் டிஜிட்டல் புரட்சி என்னும் இலக்க மயமாக்கல் தொழில் நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கினோம்.  கோவிட் 19 சூழலில் இலக்கமயமாக்கல் தொழில்நுட்பம் நமக்கு பாதுகாப்பானதாக இருந்ததால், நமது நாட்டில் டிஜிட்டல் தொழில் நுட்பப் பயன்பாடு வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. மிகவும் ஏழ்மையில் மூழ்கியுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும் மனித குலத்திற்கும் பயனளிப்பதாக இந்த இலக்க மயமாக்கல் தொழில் நுட்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்று நமது பாரதப் பிரதமர், சாதனைச் சிற்பி, மதிப்பிற்குரிய ஶ்ரீ நரேந்திர மோதி அவர்களும் வலியுறுத்தியுள்ளார்.                                                         

எனவே, பின்வரும் இலக்குகளை அடைவதற்கான வழி முறைகளை நாம் ஆராய்வோம் :

  1. நேரடி மற்றும் மறைமுக வரிகள் வசூல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அரசின் வரி வருவாயை அதிகரிக்க வாய்ப்புக்களை கண்டறிதல்.
  2. வரி வசூல் அடித்தளத்தை விரிவாக்கி, வரிச் சுமையை குறைக்க முயற்சித்தல்.
  3. வரி ஏய்ப்புக்களை குறைத்து, மக்களிடம் வரி செலுத்தும் மன நிலையை அதிகரிக்கச் செய்தல்.
  4. கருப்புப் பணம் உருவாவதைத் தடுத்து, நமது பொருளாதாரத்திலிருந்து கருப்புப் பணத்தை வெளியேற்ற முயற்சித்தல்.
  5. சிக்கலான வரி வசூல் செயல்பாடுகளை கைவிட்டு, எளிமையான நடைமுறைகளினால் உற்பத்தி மற்றும் செயல் திறனை மேம்படுத்துவது.
  6. வரி வசூல் செய்யும் முறையில் மாற்றம் செய்வதன் மூலம், ஊழலை ஒழித்து, திறமையை மேம்படுத்தி பொறுப்பேற்கும் நடைமுறையை அமலாக்குதல்.     

மேலே உள்ள இலக்குகளை அடைய நமது பரிந்துரைகள் :

  1. வங்கிகளின் மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு 3% வங்கி பரிவர்த்தனை வரி வசூலிக்க வேண்டும். NEFT, RTGS, Mobile Banking, Net Banking மற்றும் Unified Payments Interface போன்ற அனைத்து விதமான பணப் பரிவர்த்தனைகளுக்கும் இந்த வரி பொருந்தும். பயனாளியின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கு முன்பாக இந்த வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
  2. 3% பணப் பரிவர்த்தனை வரியை அமல்படுத்துவதற்கு முன்பு, மத்திய அரசாங்கத்தின் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கான வருமான வரி, ஜி எஸ் டி, எக்சைஸ், சொத்து வரி, மூலதன ஆதாய வரி, பங்குகள் பரிவர்த்தனை வரிகள், மற்றும் பல் வேறு கூடுதல் கட்டணங்கள் உள்ளிட்ட உள்நாட்டு வரிகள் அனைத்தையும் கைவிட வேண்டும்.
  3. ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப் பட்ட அனைத்து வரிகளும் இப்போது இருப்பது போலவே, நடைமுறையில் இருக்கும்.
  4. ரூபாய் 2,000 க்கு மேல் ரொக்கமாகச் செலவு செய்யப்படும் எந்தப் பரிவர்த்தனையும் சட்ட விரோதமானதாகவும் செல்லாத்தாகவும் கருதப்படும். அப்படிப்பட்ட சட்ட விரோதமான பரிவர்த்தனைகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
  5. தற்போதைய சூழ்நிலையில், ரொக்கமாக மட்டுமே வியாபாரம் செய்யும், ஜி எஸ் டி பதிவு இல்லாத மிகச்சிறிய வியாபாரிகளான, காய்கறி வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் ஆகியவர்களை இந்தச் சீர்திருத்தம் பாதிக்காது. 2,000 ரூபாய் வரையிலான ரொக்க வியாபாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை.

 

  1. சட்ட விரோத பரிவர்த்தனையின் மூலம் பெறப்பட்ட பொருள் / பணம் இவற்றை பறிமுதல் செய்யவும் வங்கிக் கணக்கை முடக்கவும், பரிவர்த்தனை வரி ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். 
  2. வங்கிக் கணக்குகளிலிருந்து ரொக்கமாக பணம் எடுப்பதற்கு பாரத ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, ரொக்கமாக பணம் புழங்குவதை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
  3. தனி நபரோ, நிறுவனமோ, வேறு ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ வங்கி மூலம் பணம் பரிமாற்றும் போது விதிக்கப்படும் வரியே பரிவர்த்தனை வரியாகும். இந்த வரி, பணப் பரிவர்த்தனை சம்பந்தப்பட்டது மட்டுமே. பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட பொருளின் மதிப்பையோ, சேவையின் மதிப்பையோ இந்த வரி சார்ந்திருக்காது மற்றும் கட்டுப்படுத்தாது.
  4. அரசாங்கப் பணப் பரிவர்த்தனைகள், வங்கிகளுக்கிடையிலான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தனி நபரோ நிறுவனமோ தன்னுடைய பெயரிலேயே உள்ள வேறு வங்கிக் கணக்கிற்கே பணத்தை மாற்றிக் கொள்வது ஆகிய பரிவர்த்தனைகளுக்கு வங்கிப் பரிவர்த்தனை வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
  5. வங்கிப் பரிவர்த்தனை வரியின் மூலம் வசூலாகும் தொகை ஏற்கனவே கிடைத்த வரி வருவாயைக் காட்டிலும் கணிசமாக அதிகரிக்கும். எனவே, வங்கிப் பரிவர்த்தனை வரியை பின் வரும் விகிதத்தில் பிரித்துக் கொள்ளலாம் : மத்திய அரசு 65%, மாநில அரசுகள் 25%, யூனியன் பிரதேசங்கள் 6.25%, பரிவர்த்தனை வரி ஆணையம் 3% மற்றும் வங்கிகளின் வலைப் பின்னல் அமைப்பு 0.75%.
  6. வரி வசூலில் தனி நபர் தலையீடு மற்றும் தனி நபர் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் நோக்கில், வங்கிப் பரிவர்த்தனை வரி ஆணையத்தின் அமலாக்கப் பிரிவு, வரி ஏய்ப்பை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைக் கொண்டு கணினி மூலம் தனி நபர் உரிமைகளை மீறாமல், வங்கிக் கணக்குகளை ஊடுருவிக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  7. பெரிய மதிப்புள்ள 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை, படிப்படியாக, மக்களிடம் பீதியையும், கலவரச் சூழ்நிலையையும் உருவாக்காமல், பாரத ரிசர்வ் வங்கி, புழக்கத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும். புழக்கத்திலிருக்கும் நோட்டின் அதிக பட்ச மதிப்பு ரூபாய் 100 என்ற நிலை உருவாக வேண்டும்.
  8. ஹவாலா, போதைப் பொருட்கள் வியாபாரம், மற்றும் நிழல் உலகின் அனைத்து சட்ட விரோத பரிமாற்றங்களுக்கும் ரொக்கம் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. ரொக்கமாக பணப் பரிவர்த்தனை செய்வது இயலாது என்ற சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுவிட்டால், சட்ட விரோதச் செயல்பாடுகள் கணிசமாகக் குறையும்.
  9. வங்கிப் பரிவர்த்தனை வரியின் சிறப்புக்கள் பற்றி மிகப் பெரிய மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கம் நடத்தப்பட வேண்டும். சாமானியர்களுக்குப் புரியக்கூடிய எளிமையான வரியாக வங்கிப் பரிவர்த்தனை வரி இருப்பதால், விருப்பத்துடன் மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள். எனவே, வரலாறு காணாத அளவிற்கு மக்களின் ஆதரவுடன், வங்கிப் பரிவர்த்தனை வரிச் சீர்திருத்தம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படும்.
  10. சூதாட்டம், கேளிக்கைகள், சாராயம், புகையிலை, சிகரெட், குட்கா, அதி நவீன சொகுசு வீடுகள் மற்றும் வாகனங்கள், க்ரிப்டோ மற்றும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசாங்கம், வங்கிப் பரிவர்த்தனை வரியைத் தவிர, கூடுதலாக சிறப்பு வரியை விதிக்கலாம்.
  11. பெட்ரோலியப் பொருட்களான, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றை மாநிலங்களின் வரிப் பட்டியலிலிருந்து மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இந்த மாற்றத்தைத் தவிர, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் தற்போது இருக்கும் எந்த அதிகாரத்திலும் மாற்றம் இருக்காது.
  12. தற்போதைய ஜி எஸ் டி, நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு வாரிய ஊழியர்கள் அனைவரும் வங்கிப் பரிவர்த்தனை வரி ஆணையத்தின் கீழ் செயல்படுவார்கள். அவர்களுக்கு ஏதாவது சிறப்புப் பயிற்சிகள் தேவைப்பட்டால் அவற்றை மத்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  13. வங்கிப் பரிவர்த்தனை வரி, மிகவும் எளிமையான, வெளிப்படையான, சுலபமாக வங்கிகளால் நடைமுறைப் படுத்தக் கூடிய, மிகவும் முன்னேறிய, சிறப்பான வரிச் சீர்திருத்த நடைமுறையாகும்.
  14. கடந்த 2021-2022 ஆண்டில் நடைபெற்ற NEFT, RTGS, Mobile Banking, Net Banking மற்றும் Unified Payments Interface போன்ற அனைத்து தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை பற்றி, பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் வங்கிப் பரிவர்த்தனை வரியைப் பற்றி தொடர்ந்து விவாதிப்போம்.
  15. தனியார் பணப் பரிவர்த்தனை (கோடி ரூபாய்)

ஏப்ரல் 2021                                     1,06,07,533.01

மே 2021                               99,28,845.33

ஜூன் 2021                                1,20,19,051.90

ஜூலை 2021                          1,26,42,626.37

ஆகஸ்ட் 2021                         1,22,82,506.59

செப்டம்பர் 2021                       1,34,37,428.18

அக்டோபர் 2021                       1,27,78,273.87

நவம்பர் 2021                          1,22,69,701.01

டிசம்பர் 2021                           1,55,77,173.67

ஜனவரி 2022                          1,31,50,717.28

பிப்ரவரி 2022                          1,06,97,219.34

மார்ச் 2022                               2,70,46,310.20

 

3% வங்கிப் பரிவர்த்தனை வரி விதிக்கப் பட்டிருந்தால், 2021-2022 நிதியாண்டில் மத்திய அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கக் கூடிய வருமானம் (கோடி ரூபாய்)

 

ஏப்ரல் 2021                                      3,18,226.00

மே 2021                           2,97,865.36

ஜூன் 2021                                      3,60,571.56

ஜூலை 2021                          3,79,278.79

ஆகஸ்ட் 2021                         3,68,475.20

செப்டம்பர் 2021                      4,03,122.86

அக்டோபர் 2021                      3,83,348.22

நவம்பர் 2021                          3,68,091.03

டிசம்பர் 2021                           4,67,315.21

ஜனவரி 2022                                 3,94,521.52

பிப்ரவரி 2022                                 3,20,916.58

மார்ச் 2022                                     8,11,389.31

ஆக மொத்தம்               48,73,121.60

  1. எனவே, வங்கிப் பரிவர்த்தனை வரியின் மூலம் கிடைத்திருக்கக் கூடிய வரி வருமானமாகிய 48,73,121.60 கோடி ரூபாய், 2021-2022 நிதியாண்டுக்கான மத்திய அரசாங்கத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டு வருமானமாகிய 25,16,059.27 கோடி ரூபாயை விட 93.68% அதிகம்!
  2. வங்கிப் பரிவர்த்தனை வரி அமலில் இருந்திருந்தால், மொத்தம் கிடைத்த 48,73,121.60 கோடி ரூபாயில், நமது பரிந்துரைப்படி 65% பங்காக 31,67,529.04 கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்திற்கும், 25% பங்காக 12,18,280.40 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கும், 6.25% பங்காக 3,04,570.10 கோடி ரூபாய் யூனியன் பிரதேச அரசுகளுக்கும்,3% பங்காக  1,46,193.65 கோடி ரூபாய் வங்கிப் பரிவர்த்தனை வரி ஆணையத்திற்கும்,  0.75% பங்காக 36,548.41 கோடி ரூபாய் வரியை வசூலித்துத் தந்த வங்கிகளின் வலைக் கூட்டமைப்பிற்கும் கிடைத்திருக்கும்.
  3. ஆகவே, கடந்த ஆண்டு கிடைத்த 25,16,059.27 கோடி ரூபாய்க்கு பதிலாக, 31,67,529.04 கோடி ரூபாய், வரி வருவாயில் நமது மத்திய அரசாங்கத்தின் பங்காகக் கிடைக்கும். இது 2021-2022 ஆண்டிற்கான வரி வருவாயை விட 25.90% அதிகம்!
  4. நமது மத்திய அரசின் பங்காகக் கிடைத்திருக்கக் கூடிய 31,67,529.04 கோடி ரூபாயுடன், நமது நாட்டில் சுங்க வரியாகக் கிடைத்த 1,89,000 கோடி ரூபாயையும், வரியில்லா வருவாய் 3,13,791.31 கோடி ரூபாயையும், கடனில்லாத மூலதன வருவாய் 99,975 கோடி ரூபாயையும் கூட்டினால், நமது மத்திய அரசாங்கத்திடம் 37,70,295.35 கோடி ரூபாய் ஒட்டு மொத்த வருவாய் இருந்திருக்கும்!
  5. பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் இழப்பை, சூதாட்டம், கேளிக்கைகள், சாராயம், புகையிலை, சிகரெட், குட்கா, அதி நவீன சொகுசு வீடுகள் மற்றும் வாகனங்கள், க்ரிப்டோ கரன்சி, மற்றும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசின் மூலம் விதிக்கப்படும் சிறப்பு வரி ஈடுகட்டிவிடும்!

                                                          – அரங்க. வரதராஜன்

                                                           vrvaradarajan@yahoo.com

                                   ***************

 

 

 

 

  

 

 

    

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here