கள்ளிக்குடியில் நான்காண்டுகளாக சிறுதானிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வரும் தமிழ்ச்செல்வி பிரதமருடனான தனது அனுபவங்களை விவரித்தார். நான் எம்.ஏ. எம்.எஸ்சி., எம்.எட்., முடித்துள்ளேன். கணவர் வெங்கடேஷ்குமார் விபத்தில் அடிபட்ட போது அவரை மீட்க பாட்டி வைத்திய உணவு முறைகளை கையாண்டோம். அப்போதிருந்து சிறுதானியங்களின் அருமை புரிய ஆரம்பித்தது. குடிசைத்தொழிலாக சத்துமாவு தயாரித்து விற்பனை செய்தேன்.
அதன்பின் மதுரையில் உள்ள கதர் கிராம தொழில்கள் ஆணையத்தில் (கே.வி.ஐ.சி.,) கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தினேன்.
உடனடியாக சமைக்கும் வகையில் தினை பொங்கல், வரகு பொங்கல் உட்பட 60 வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறேன். கணவர் விற்பனையை கவனித்து கொள்கிறார். ஜூன் 30 ம் தேதி சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான தினம்.
தமிழகத்தில் இருந்து 2 பேர் மட்டுமே சென்றோம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 13 பேர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் 50 பேர் பங்கேற்றதில் 5 பேருக்கு மட்டுமே பிரதமரிடம் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.பிரதமரை அருகில் பார்த்ததும் என்னை அறியாமல் கைகளை மேலே உயர்த்தினேன். பேசச் சொன்னார்.
‘தமிழ்ச்செல்வி ப்ரம் தமிழ்நாடு’ என்றதும் வணக்கம் என்று தமிழில் சொன்னார். தமிழகத்தில் எங்கிருந்து வருகிறீர்கள்… என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். உள்ளூர் விற்பனையிலும் கவனம் செலுத்துங்கள் என்றார்.
பிரதமருடன் பேசியது கனவு போல இருக்கிறது. கே.வி.ஐ.சி.,யில் கடன் பெற்று சிறியளவில் தொழில் செய்கிறேன். இன்னும் பெரிய வெற்றி பெற்று மீண்டும் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்றார்.