‘அந்தணர் என்போர் அறவோர்’ என்ற வள்ளுவர் வாக்கின்படி, பிற உயிர்கள் வாழத் தான் முனைந்து பாடுபட்டவர் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா. நூலாசிரியர், பத்திரிகை ஆசிரியர் தொழிற்சங்கம் இல்லாமலேயே பாட்டளிகளை ஒன்றாக்கியவர், பொதுவுடைமைவாதி, தனித் தமிழில் கட்டுரை எழுதுவோருக்கு 5 ரூபாய் பரிசு என்று 1915லேயே அறிவித்த தனித்தமிழ்ப் பற்றாளர், ‘ஒன்று எங்கள் ஜாதியே’ என்று திருமூலர் வழியில் நடந்த சித்தர், எந்த நேரமும் பாரத விடுதலை, பாரத மாதா வழிபாடு என்று வாழ்ந்த அப்பழுக்கற்ற துறவி. இப்படி, நாட்டு விடுதலைக்குப் பேச்சு, எழுத்து, இதழியல், நாடகம், நடிப்பு என்ற பல துறையிலும் தொண்டு செய்த சுப்பிரமணிய சிவம் அடுத்தடுத்த சிறைவாசம், தன் உடல்நலத்தைக் கவனிக்காமல் ஈடுபட்ட விடுதலைப் போராட்டம், வறுமை இவற்றால் நோயுற்றார். இவர் காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிரவாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றால் ஓய்ந்து போனார். இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் ஒதுக்ககினர். மனம் உடைந்த சிவா 23.7.1925ல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி சென்று அந்தத் தூய, வீரத்துறவி சிவாவின் சமாதியைக் கண்டு தொழுது, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று மனதார சொல்லிவிட்டு வரலாமே!