அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு ரூ. 259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் இது குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் “இதுபோன்ற போராடங்களின் விளைவாக பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு காரணமாக ரயில் சேவைகள் தடைபட்டதால் பயணிகளுக்கு திருப்பியளிக்கப்பட்ட தொகை குறித்த தனி தரவுகள் அக்னிபத் திட்டம் தொடர்பாகவென்று தனியாக பராமரிக்கப்படவில்லை. இருப்பினும், ஜூன் 14, 2022 முதல் ஜூன் 30, 2022 வரையிலான காலகட்டத்தில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் தோராயமாக ரூ. 102.96 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. சேதங்கள், ரயில்வே சொத்துக்கள் உட்பட அரசு சொத்துக்களை அழித்தல் போன்ற வழக்குகள் ஐ.பி.சி மற்றும் ரயில்வே சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஜி.ஆர்.பி மற்றும் மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.