உலகிற்கே வழிகாட்டும் குருவாக விளங்கிய நமது பாரத நாடு சிற்சில பலவீனங்களின் காரணமாக அந்நிய ஆக்கிரமிப்பினை எதிர்த்து சில நூறு ஆண்டுகள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. பாரதம் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு அந்நிய ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்று எழுபத்தைந்தாவது பவளவிழா ஆண்டினை நிறைவு செய்து எழுபத்தாறாவது ஆண்டினில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
சுதந்திர போராட்ட காலகட்டத்தில் அதற்காக நமது முன்னோர்கள் செய்த அளப்பரிய தியாகங்களையும், சாகசங்களையும் எண்ணி பார்க்கும் பொழுது கர்வத்துடன் கூடிய பெருமித உணர்வு உள்ளத்தில் ஏற்படுகிறது. இன்று கொண்டாடும் சுதந்திரத்தினை கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி நாம் பெற்றுவிடவில்லை. தமிழகத்தின் பூலித்தேவன் துவங்கி நாடு முழுவதும் லட்சக்கணக்கான வீரர்களும் வீராங்கனைகளும் சுதந்திர போராட்டம் எனும் வேள்வியில் ஆகுதியாகி உள்ளனர்.
தூக்குகயிற்றை துச்சமென மதித்து தூக்கு மேடை ஏறியவர்கள், தடியடியால் தாக்கபபட்டு தன்னுயிரை தந்தவர்கள், கொடுஞ்சிறைகளில் கல்லுடைத்தும் செக்கிழுத்தும் வதைக்கப்பட்டவர்கள் என்று தியாகியர் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அப்படிப்பட்டோர் சிந்திய செந்நீர் தான் சுதந்திர பயிர் விளைய உரமாக அமைந்தது.
அவ்வாறு பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.76வது சுதந்திர தினம் கொண்டாடும் நேரத்தில் அதற்காக முன்னோர்கள் செய்த தியாகங்களை மனதில் ஏந்தி அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு புரியவைத்து அவர்களது உள்ளத்தில் தேசிய பெருமித உணர்வினை உயிர்ப்புடன் விளங்கச் செய்வோம்.
சுதந்திரம் என்ற பதத்திற்கு பொருள் ஸ்வ தந்திரம் என்பதாகும். அதாவது தேசத்தின் சமூக பொருளாதார அரசியல் கலாச்சாரம் என்ற அனைத்து விஷயங்களுக்கும் பாரம்பரிய பாரதிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து அதன் திசையில் நாடு முன்னேற திட்டமிட்டு கொண்டு செல்ல வேண்டும். சமீப காலமாக அந்த திசையில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பக்கபலமாக இருந்து தேசம் வெற்றி பெற ஒத்துழைப்பது நமது கடமை. அதுவே நமது தியாகியர்க்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
ஸ்ரீ . கிருஷ்ண முத்துசாமி