ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்

0
316

உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும். சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, இந்த அமைப்பே முடிவு செய்கிறது. இந்த கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மொத்தம், 15 நாடுகள் உடைய பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்போது நிரந்தரமில்லா உறுப்பினராக உள்ளது. இந்தியாவின் இரண்டாண்டு பதவிக் காலம் வரும் டிசம்பரில் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், ‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர வேண்டும்’ என, மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் நடந்த ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் இதை வலியுறுத்தினார். ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெசை சந்தித்தபோதும் இதை அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று ஜெய்சங்கர் கூறியதாவது: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இந்தப் பணி கடினமானது தான்; சிக்கலானது தான். ஆனால், அதையே காரணம் கூறி, சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதை தொடர்ந்து தள்ளிப்போட முடியாது. ஏதாவது ஒரு புள்ளியில் இந்த நடவடிக்கை துவங்கப்பட வேண்டும். இதையே இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு, அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here