மத்திய அரசு ‘பிரதம மந்திரி பாரத வெகுஜன உரத் திட்டம்’, ‘ஒரே நாடு ஒரே உரம்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2 நாட்கள் நடைபெறும் ‘விவசாயிகள் சம்மேளனம் 2022’ நிகழ்ச்சியை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், “ஒரே நாடு ஒரே உரம்” என்ற புதிய திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களையும் வழங்கும் நிறுவனங்கள் ‘பாரத்’ என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும். மேலும், மானிய விலையில் வழங்கப்படும் மண் உரங்கள் யூரியா, டி அம்மோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி), மியூரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி) மற்றும் என்.பி.கே போன்றவை அனைத்தும் நாடு முழுவதும் ‘பாரத்’ என்ற ஒரே பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும். இதையடுத்து பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில், ரூ. 16 ஆயிரம் கோடியையும் பிரதமர் மோடி விடுவித்தார். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் தலா ரூ. 2,000 பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில், 600 விவசாய சம்ருத்தி கேந்திராக்களையும் மோடி திறந்து வைத்தார். இந்த கிசான் சம்ருத்தி கேந்திராக்கள், ஒரே இடத்தில் விவசாயத் துறை தொடர்பான பல சேவைகளைப் பெறக்கூடிய இடமாக விளங்கும். விவசாயிகளுக்கு விவசாயத் துறை தொடர்பான பொருட்களை ஒரே இடத்தில் வழங்கும் இடமாக செயல்படும். நாட்டில் உள்ள 3.3 லட்சத்திற்கும் அதிகமான உர சில்லறை விற்பனைக் கடைகளை ‘பிரதமர் விவசாய சம்ருத்தி கேந்திராக்கள்’ ஆக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உரங்கள் பற்றிய டிஜிட்டல் வடிவ இதழான ‘இந்தியன் எட்ஜ்’ஐ பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பாரதம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 16,000 கோடி மதிப்பிலான 12வது தவணை அனுப்பப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மலிவான விலையில் தரமான உரங்கள் வழங்கப்படும். உரங்களின் உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் தரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் பலன் அடைவார்கள். உரங்களின் உற்பத்தி தொழில்நுட்பத்தின் மாற்றத்தால், விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும். பயிர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். உலகளவில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் மையமாக, பாரதம் விரைவில் உருவாகும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.