பாரதத்தை பாராட்டிய இம்ரான்கான்

0
131

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், தனது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன்
இணைந்து லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு பிரம்மாண்ட பேரணியை தொடங்கினார். நவம்பர் 4ம் தேதி இஸ்லாமாபாத்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தான் அரசு, அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் எந்த முயற்சியும் இரும்புக்கரம் கொண்டு எதிர்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே, லிபர்ட்டி சவுக்கில் ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான் கான், ‘எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால் நான் என் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டுமே செய்கிறேன். சுதந்திரமான பாகிஸ்தானை பார்க்க விரும்புகிறேன். அதற்கு சக்திவாய்ந்த ராணுவம் தேவை. நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சிப்பது அதன் ஆக்கப்பூர்வ முன்னேற்றங்களுகாகவே. பாதுகாப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதை நான் விரும்பவில்லை . எனக்கு சுதந்திரமான, நியாயமான தேர்தல் வேண்டும். யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என கூறினார்.

இந்த உரையின்போது இம்ரான் கான் பாரதத்தை பாராட்டி பேசிய இம்ரான்கான், “பாகிஸ்தானின் முடிவுகள் பாகிஸ்தானால் எடுக்கப்பட வேண்டும். என் நாட்டு மக்களைக் காப்பாற்ற எனக்கு விருப்பம் இருந்தால், யாரும் எங்களை கேள்வி கேட்கக் கூடாது. ரஷ்யா மலிவான விலையில் கச்சா எண்ணெய் தருகிறது. பாரதம் ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்கலாம். ஆனால், அடிமை பாகிஸ்தானியர்களுக்கு அந்த அனுமதி இல்லை. நான் ஒரு சுதந்திர நாட்டைப் பார்க்க விரும்புகிறேன், நீதி மேலோங்க வேண்டும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

பாரதம், பிரதமர் மோடி, மத்திய அரசின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளை இம்ரான்கான் பாராட்டுவது இது முதல் முறை அல்ல. பிரதமர் மோடியை போல ஆட்சி செய்வேன் என கூறியே ஆட்சியை பிடித்த இம்ரான்கான், இந்த ஆண்டு மார்ச் மாதம் கைபர் பக்துன்க்வாவில் உரையாற்றுகையில், “அமெரிக்காவுடன் ‘குவாட்’ அமைப்பில் உறுப்பினராக உள்ள பாரதமும் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அதனை யாரும் தடுக்கவில்லை. நான் இன்று பாரதத்துக்கு வணக்கம் செலுத்துகிறேன். பாரதத்தின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களின் முன்னேற்றத்திற்காக உள்ளது’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here