முனிவர்களின் தவத்தைக் கலைப்பது, பூஜைகளை தடை செய்வது என அனைத்து முரண்பாடான வேலைகளையும் செய்பவர்கள் யார் என்றால், அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் அவர்களை பற்றி விவரிக்கிறது புராணங்கள். அப்படியொரு சூரனை வதம் செய்தவர் நமது முருகப்பெருமான், அந்த வதம் செய்த நிகழ்வுதான் சூரசம்ஹாரம். தட்சன், காசிபன் இருவருமே இறைவன் சிவனாரின் வரத்தை வாங்கிக் கொண்டு அசுரத்தனமான செயல்களில் ஈடுபட்டார்கள். வேடிக்கை என்னவென்றால், இவர்களில், தட்சன், சிவபெருமானுக்கே மாமனாரானான். அகந்தையும் ஆணவமும் கொண்ட தட்சன், சிவபிரானிடமிருந்து உருவான வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அந்த தட்சன் மறுபிறவி எடுத்து சூரபத்மனாக வந்தான் என்கிறது புராணம், போன பிறவியில் கொண்டிருந்தது போலவே அதே துர்குணங்களால் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் என அனைவருக்கும் இன்னல் செய்தான்.சூரபத்மனை இம்முறை எப்படியாவது அழிக்கவேண்டும் என சிவனாரிடம் கண்ணீர் மல்க முறையிட்டார்கள் தவஸ்ரேஷ்டர்கள். கடந்த பிறவியில், தட்சனை அழிக்க சர்வேஸ்வரன் உருவெடுத்தார். இந்த முறை சூரபத்மனை அழிக்க முருகப் பெருமானைப் பணித்தார். சிவனாரின் உத்தரவுப்படி, முருகப்பெருமான், சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டார் அந்த சூரனை அழிக்க வேல் வழங்கினார் பார்வதிதேவி அப்படி அவர் வேல் வழங்கிய திருத்தலம் நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கல். வேல் வாங்கிய முருகன், சூரபத்மனை அழித்து தேவர்களுக்கும் மக்களுக்கும் நிம்மதியை கொடுத்தார். பன்னிரு கரங்களில் வேலாயுதம், கோழிக் கொடி, அங்குசம், பாசம், வில் அம்பு, கத்தி, கேடயம், கோடாரி, சூலம், கதை, சங்கம், சக்கரம் தாங்கி முருகப்பெருமான் போருக்குப் புறப்பட்டதெல்லாம் உலக உயிர்களைக் காக்கவன்றி வேறு எதற்கு? கருணையும் கனிவும் கொண்டு நமக்கு நல்வழிகாட்ட கடற்கரையில் வேலனாகக் கோயில் கொண்டிருக்கும் அந்தத் திருத்தலம்தான் திருச்செந்தூர்.
வால்மீகி ராமாயணத்தின் பால காண்டத்தில் விசுவாமித்திரர், ராம லக்ஷ்மணருக்கு குமார சம்பவத்தை எடுத்துக் கூறி முருகப்பெருமானின் அவதார சிறப்புகளை எடுத்துக் கூறும்போது, ‘வேலனை வணங்கி அவனிடம் முழு பக்தி வைப்பவர்களுக்கு குறை ஒன்றும் கொடுக்காத மறைமூர்த்தி அவன். அவர்கள் ஸ்கந்த லோகத்தில் ஸ்ரேஷ்டமான நிலையை பெறுவது உறுதி. ஆகவே, கந்தனைப் பற்றிக் கொள்ளுங்கள்’ என்கிறார். “போர்ப் படைகளை தகுந்த ஆளுமைகளுடன் செயல்படுத்தி வெற்றிகளைக் குவிப்பதில் முருகனுக்கு இணை முருகனே,’ என்கிறார் அகத்தியர். மகாபாரத்தில் பிதாமகர் பீஷ்மர் துரியோதனாதிகளின் படைத் தலைமையை ஏற்கும் முன் கந்தனை வேண்டிக் கொண்டதாக தகவல் உள்ளது.
கந்த சஷ்டி நன்னாள் இன்று (30ம் தேதி). கந்த சஷ்டி கவசம் பாடுவோம். இது தெய்வீகம் மற்றும் நேர்மறை சக்தி போன்றவற்றைக் கொடுக்கவல்லது என்பது சித்தர் வாக்கு, ஸ்கந்த குரு கவசம், அருணகிரியாரின் கந்தர் அனுபூதி, ஆதி சங்கரரின் சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்றவற்றையும் பாராயணம் செய்வோம். நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து கரை சேர்வோம்.