காமன்வெல்த் நாடுகளின் வங்கி ஆளுநர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாரதம், தனது யு.பி.ஐ தொழில்நுட்பத்தை ஏனைய நாடுகளுடனும் பகிர விரும்புவதாக தெரிவித்தது. பாரதத்தின் இந்த முடிவை காமன்வெல்த் பொதுச் செயலாளர் பாட்ரிசியா ஸ்காட்லாந்து வரவேற்றுள்ளார். இதுகுறித்து பாட்ரிசியா கூறுகையில், “பாரதம் மிகவும் பிரகாசமாக உள்ளது. தன் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர விருப்பம் தெரிவித்திருப்பதானது அதனை மேலும் பிரகாசமாக்குகிறது. பாரதத்தின் இந்த பெருந்தன்மையை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோல வேறு சில நாடுகளும் இத்தகைய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன. ஆனால், பாரதம் தான் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. பெருந்தன்மையுடன் அதை பகிரவும் முன்வந்துள்ளது. இந்த யு.பி.ஐ தொழில்நுட்பத்தை பகிர்வது, டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பாரதம் டிஜிட்டல் தளத்தில் மிக வேகமாக பயணித்து வருகிறது. அதன் டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் லட்சக்கணக்கான மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டுள்ளது. மக்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக உதவித் தொகையை அனுப்புவதால், பணம் மக்களின் கைகளுக்கு உடனடியாக செல்கிறது” என்று குறிப்பிட்டார்.