சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டியில், கடந்த மே 19ம் தேதி காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களிடம் இருந்து, 2 நாட்டு கைத்துப்பாக்கிகள், வெடிமருந்து, முகமூடிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்பதும், பொறியியல் பட்டதாரிகளான இருவரும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் மீது பற்று கொண்டு, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் அதற்காக, சேலம் செட்டிச்சாவடி பகுதியில், அவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கைத்துப்பாக்கிகளை தயாரித்ததும் தெரியவந்தது. இவர்களுடன் தொடர்பில் இருந்த சேலத்தைச் சேர்ந்த கபிலர் என்பவரும் கைது செய்யப்பட்டார். மூவர் மீதும் ஆயுதச் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் அந்த மூவர் மீதும் என்.ஐ.ஏ சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கைது செய்யப்பட்டுள்ள அந்த மூவரும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பற்று கொண்டு, உலகத் தமிழ் நீதிமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன், விடுதலைப் புலிகளை போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பினர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று, டாஸ்மாக் மதுக்கடைகள், குவாரிகள், கிரஷர்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தவும் இந்த பயங்கரவாத செயல்கள் மக்களிடையே அச்சத்தை பரப்பும், விடுதலைப் புலிகள் போன்றதொரு அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக துவக்கப்பட்டது என்ற செய்தியை, பொதுமக்களுக்கும் அரசுக்கும் அனுப்பவும் திட்டமிட்டிருந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது