கைவினை கலைஞர்களுக்கு விருதுகள்

0
87

டெல்லியில் இன்று, 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கான தலைசிறந்த கைவினை கலைஞர்களை கௌரவிக்கும் ஷில்ப் குரு மற்றும் தேசிய விருதுகளை வழங்க மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விருதுகள் இன்று ஒன்றாக வழங்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் கைவினைத் துறை குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் பெருமளவிலான கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது; நாட்டிற்குக் கணிசமான அந்நியச் செலாவணியையும் உருவாக்குகிறது. நமது கலாச்சார பாரம்பரியத்தையும் பாதுகாப்பதிலும் உலக அளவில் பரைசாற்றுவதிலும் முக்கியபங்கு வகிக்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதியில் கைவினைப் பொருட்கள் துறை தொடர்ந்து கணிசமான பங்களிப்பை செய்துவருகிறது. தலைசிறந்த கைவினை கலைஞர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் திட்டத்தை 1965ம் ஆண்டு முதல் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் செயல்படுத்தி வருகிறது. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் கைவினைப் பொருட்கள் தொழிலில் நாட்டின் வளமான மற்றும் பன்முகக் கைவினைப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த கைவினைத் துறையின் மறுமலர்ச்சிக்கும் பங்களிப்பு செய்யும் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன. கைவினைத் துறையில் சிறந்து விளங்கும் கைவினை கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here