டிஜிட்டல் கரன்சி இன்று வெளியீடு

0
154

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் பிட் காயின், எதிரீயம், டோஜ்காயின், ரிப்பிள் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் புழக்கம் அதிகரித்து வந்தது. இது எந்த நாட்டின் மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டின் கீழும் வராது என்பதால் அவற்றில் அன்றாடம் பல்வேறு மோசடிகள் நடைபெற்றன. பயங்கரவாதிகள், கருப்பு பண முதலைகள், மோசடிப் பேர்வழிகள் போன்றோரின் பரிவர்த்தனைகளும் கிரிப்டோ கரன்சிகளில் மேற்கொள்ளப்பட்டதால் இது நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம், வளர்ச்சிக்கும் மிகப்பெரிய ஆபத்தாக இருந்தது. இதனால், கிரிப்டோ கரன்சி மீது நம்பிக்கையற்ற சூழல் நிலவியது. இந்நிலையில், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப, இந்திய ரிசர்வ் வங்கியும் டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் (இ ரூபாய்) முயற்சியில் ஈடுபட்டது. காகித வடிவில் இல்லாமல், டிஜிட்டல் வடிவில், ரூபாய் நோட்டுகளில் இருப்பதுபோன்றே சீரியல் எண், தனிப்பட்ட எண்களுடன் டிஜிட்டல் கரன்சி இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியால் இது உருவாக்கப்படுவதால், மக்கள் அச்சமின்றிப் பயன்படுத்தலாம். நவம்பர் 1ம் தேதி பரிசோதனை முயற்சியாக, மொத்த பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதனையடுத்து தற்போது சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடுகிறது. முதல்கட்டமாக, மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஷ்வர் உள்ளிட்ட 4 நகரங்களில் செயல்படும் எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் பேங்க், ஐ.டி.எப்.சி பர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளில், சோதனை முயற்சியாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து அஹமதாபாத், கௌஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா, கேங்டாக் ஆகிய நகரங்களுக்கும், பரோடா வங்கி, இந்திய யூனியன் வங்கி, ஹெஸ்.டி.எப்.சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றுக்கும் டிஜிட்டல் கரன்சி திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இது சோதனை முயற்சி என்பதால், குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையேயான பரிவர்த்தனையாக இது செயல்படும். டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டுக்கு வருவதால், காகித ரூபாயை அச்சிடுதல், நிர்வகித்தல் உள்ளிட்ட செலவுகள் குறையும். நாட்டின் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு டிஜிட்டல் கரன்சி உந்துசக்தியாக இருக்கும். மக்களும் இதனை அலைபேசி செயலி வழியாக எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும். ஆன் லைன் மட்டுமின்றி இணையம் இல்லாதபோது ஆஃப்லைனிலும் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் டிசம்பர் 1 முதல் 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 ரூபாய் மதிப்பிலான ‘இ ரூபாய்’ டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளதாகத் தெரிகிறது. இது விரைவில் அடுத்தடுத்த நகரங்களுக்கு விரிவு படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சி எப்போது வெளியிடப்படும் என்பது உள்ளிட்ட விவரங்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here