டிஜிட்டல் ரூபாயை எப்படி பயன்படுத்துவது?

0
299

பாரத மக்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (சி.பி.டி.சி) அமைப்பு உருவாக்கி வெளியிடும் ரீடைல் வர்த்தகச் சந்தையில் பயன்படுத்தும் ரீடைல் டிஜிட்டல் ரூபாயின் சோதனை டிசம்பர் 1ம் தேதி தொடங்கி சோதனை செய்யப்பட உள்ளது. அதன்படி நேற்றுத் துவங்கிய ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனை திட்டத்தில் மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் மட்டும், வாடிக்கையாளர் விற்பனையாளர்கள் அடங்கிய ஒரு சிறிய வட்டத்திற்குள் ரீடைல் டிஜிட்டல் ரூபாய் திட்டம் சோதனை செய்யப்பட உள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐ.டி.எப்.சி பர்ஸ்ட் வங்கி ஆகிய 4 வங்கிகள் மத்தியில் பரிமாற்றம், வரவு கணக்குகளின் பதிவு ஆகியவை சோதனை செய்யப்பட உள்ளது. முதல் சோதனை திட்டத்தைப் பொறுத்து அடுத்தகட்ட சோதனையில் அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2வது கட்ட ரீடைல் டிஜிட்டல் ரூபாய் சோதனையில் கூடுதலான பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெஸ்.டி.எப்.சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகிய 4 வங்கிகளுடன் சேர்ந்து 8 வங்கிகள் இந்தச் சோதனையில் பங்கேற்க உள்ளன. இதனால் பொதுமக்கள் இதனை இப்போதைக்குப் உடனடியாக பெற வாய்ப்புகள் இல்லை என்றாலும் இது நமது அலைபேசிகளில் தவழும் காலம் தூரத்திலும் இல்லை.

ரீடைல் டிஜிட்டல் ரூபாய் என்பது பொதுமக்கள் பயன்படுத்துவது என்பதால் மக்கள் மத்தியில் இதுகுறித்த அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், இதை எப்படிப் பயன்படுத்துவது? இந்தப் புதிய டிஜிட்டல் ரூபாய் எப்படியிருக்கும்? என்பது போன்ற பல கேள்விகளும் எழுந்துள்ளது. டிஜிட்டல் ரூபாய் என்பது, காகித வடிவில் இல்லாமல், டிஜிட்டல் வடிவில், ரூபாய் நோட்டுகளில் இருப்பதுபோன்றே சீரியல் எண், தனிப்பட்ட எண்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியால் இது உருவாக்கப்படுவதால், மக்கள் அச்சமின்றிப் பயன்படுத்தலாம். பாரதத்தின் ரூபாய்க்கு எப்படி ₹ என்ற குறியீடு உள்ளதோ அதேபோல, டிஜிட்டல் ரூபாய்க்கு e₹ என்ற குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. சி.பி.டி.சி, இரண்டு வகையான டிஜிட்டல் ரூபாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, மொத்த விலை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் வகையில் e₹-W குறியீடு உடன் ஹோல்சேல் டிஜிட்டல் ரூபாயும், சில்லறை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் ரீடைல் டிஜிட்டல் ரூபாய்க்கு e₹-R என்ற குறியீடும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த e₹-R டிஜிட்டல் ரூபாய் என்பது ஒரு டோக்கன் போல இயங்கும்.

பொதுமக்கள் டிஜிட்டல் ரூபாய் வாயிலான பணப் பரிமாற்றத்தை வங்கிகள் அளிக்கும் டிஜிட்டல் வேலட் வாயிலாகச் செலுத்தவும், பெறவும் முடியும். மேலும் இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாய் வாயிலான பேமெண்டுகளை யு.பி.ஐ சேவை போல் கியு.ஆர் கோடு வாயிலாகவும் எளிதாக மேற்கொள்ள முடியும். இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாயை, தற்போது பயன்பாட்டில் உள்ள 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 2000 ரூபாய் நாணய மதிப்பீட்டிலேயே டோக்கன்களாக உருவாக்கப்பட்டு வங்கிகளின் வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்படும். நமது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை இந்த டிஜிட்டல் ரூபாய் வேலெட்க்கு மாறுவதன் மூலம் நாம் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும். இதேபோல் டிஜிட்டல் ரூபாயை பொதுவாகப் பயன்படுத்தும் கணக்கிற்கு மாற்றப்படும் போது அது சாதாரண ரூபாயாக கிடைக்கும். இதனால் குழப்பம் ஏதும் இருக்காது. டிஜிட்டல் ரூபாயை ஏற்கும் அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ரூபாய் வேலெட் சேவையை அளிக்கும்.

இந்த டிஜிட்டல் ரூபாய் மூலம் பணச் சலவை, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், வரி எய்ப்பு போன்ற பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். காகித ரூபாயை அச்சிடுதல், நிர்வகித்தல் உள்ளிட்ட செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு டிஜிட்டல் கரன்சி உந்துசக்தியாக இருக்கும். மக்களும் இதனை அலைபேசி செயலி வழியாக எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும். ஆன் லைன் மட்டுமின்றி இணையம் இல்லாதபோது ஆஃப்லைனிலும் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here