21 தீவுகளுக்கு வீரர்களின் பெயர்கள்

0
129

அந்தமான் & நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்கள் வசிக்காத 21 தீவுகளுக்கு, நாட்டின் மிக உயரிய போர்க்கால வீர விருதான பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 21 தீவுகளில், 16 தீவுகள் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்திலும், ஐந்து தீவுகள் தெற்கு அந்தமானிலும் உள்ளன.

இதுகுறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்தமான் நிக்கோபார் தீவுகளின் எம்.பி குல்தீப் ராய் சர்மா, பாதுகாப்பு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் வீரதீர விருதுகளை பெற்ற வீரர்களின் பெயரை 21 தீவுகளுக்கு பெயரிட மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்றார். “நமது துணிச்சலான வீரதீர விருதுகளை பெற்ற வீரர்களை கௌரவிப்பதற்காக அந்தமானில் இருந்து 21 தீவுகளை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது தாய் நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய உன்னத தியாகத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான சிறிய கையேடு ஒன்றை வெளியிடுமாறு நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கின்றேன். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தால் அந்தமான் நிக்கோபார் தீவு ஒரு யாத்திரை தலமாக உள்ளது.இப்போது பரம் வீர் சக்ரா பெற்றவர்களுக்கு இது போன்ற கௌரவம் கிடைத்திருப்பது எங்களுக்கு மிகப்பெருமையாக இருக்கிறது.இது, நமது நாளைய நம்பிக்கையான நாளுக்காக தங்களின் இன்றைய நாளைக் கொடுத்த ராணுவ வீரர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்” என்று கூறினார்.

“இன்றைய வேகமாக நகரும் உலகம் மற்றும் கடினமான போட்டி நிறைந்த அன்றாட வாழ்வில், இளைஞர்கள் நமது வளமான பாரம்பரியத்தையும் கடந்த காலத்தையும் நினைவுகூர்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த முயற்சி இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு ஒரு சான்றாகும்.மேலும் அவர்களின் வீரதீர செயல்களை இளைஞர்கள் அறிந்து கொள்வார்கள்.தேசம் தனது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் போது இது மிகவும் முக்கியமானது.”என்று கார்கில் போர் வீரர் கர்னல் திப்தாங்ஷு சௌத்ரி கூறினார். இந்த 21 தீவுகளில் சில பாதுகாக்கப்பட்ட காடுகளின் கீழ் வருகின்றன, சில தீவுகள், நீர் சறுக்கு விளையாட்டுகள், சிற்றோடை சுற்றுலா மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றிற்கு பொருத்தமான சுற்றுலா தல வளங்களைக் கொண்டுள்ளன.

வடக்கு மற்றும் மத்திய அந்தமானில் உள்ள ‘INAN370’ என்ற எண் கொண்ட முதல் மக்கள் வசிக்காத தீவுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மாவின் பெயர் சூட்டப்பட்டது. இனி ‘INAN370’ ‘சோம்நாத் தீவு’ என்று அழைக்கப்படும்.மேலும், ‘INAN308’ என்ற மற்றொரு மக்கள் வசிக்காத தீவுக்கு ‘கேப்டன் கரம் சிங் த்வீப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதேபோல, பரம் வீர் சக்ரா விருதுகள் பெற்ற மேஜர் ராம ரகோபா ரானே, நாயக் ஜாதுநாத் சிங், கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங் ஷெகாவத், கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா, லெப்டினன்ட் கர்னல் தன் சிங் தாபா மாகர், சுபேதார் ஜோகிந்தர் சிங் சஹ்னான், மேஜர் ஷைத்தான் சிங் பாடி, கம்பெனி குவாட்டர் மாஸ்டர் ஹவில்தார் அப்துல் ஹமித், ஹவில்தார் அப்துல் ஹமித் தாராபூர், லான்ஸ் நாயக் ஆல்பர்ட் ஏக்கா, கர்னல் ஹோஷியார் சிங் தஹியா, இரண்டாவது லெப்டினன்ட் அருண் கேதர்பால், பிளையிங் ஆபீசர் நிர்மல் ஜித் சிங் செகோன், மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் பானா சிங், கேப்டன் விக்ரம் பத்ரா, கேப்டன் மனோஜ் குமார் பாண்டே மற்றும் சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் ஆகியோரின் பெயர்கள் அங்குள்ள தீவுகளுக்கு சூட்டப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here