பாரதம் குறித்து உலக வங்கி

0
192

உலக வங்கி, நிகழும் நிதியாண்டிற்கான பாரதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சியின் மதிப்பீட்டை 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது, இது முன்பு 6.5 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. உலக வங்கி வெளீயிட்டுள்ள சமீபத்திய பாரத மேம்பாட்டுப் புதுப்பிப்பின்படி, நாட்டின் வலுவான பொருளாதார செயல்திறன் காரணமாக ஜி.டி.பி வளர்ச்சி மேம்படும். எனினும், பாரதத்தின் சில்லறை பணவீக்கம் இந்த நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு காரணமாக, உக்ரைன் ரஷ்ய போர், சர்வதேச எரிபொருள் விலை உயர்வு, உலக நாடுகளின் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் போன்ற மோசமான வெளிப்புற சூழல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவில் இருந்து வெளியேறும் கசிவுகள் பாரதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக பாரதம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் ஷர்மா, “பாரதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு வீழ்ச்சியிலிருந்து நன்றாக மீண்டுள்ளது. இது ஆரோக்கியமான உள்நாட்டு தேவையால் இயக்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இப்போது பாரதம் மிகவும் நெகிழ்ச்சியுடன் இருக்கிறது. இக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்முயற்சிகளும் தற்போதைய உலகளாவிய பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள பாரதத்துக்கு உதவியுள்ளன. இந்த வருடத்தில் ரூபாய் மதிப்பு 10 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. மற்ற வளர்ந்து வரும் சந்தைகளுடன் ஒப்பிடும்போது பாரதம் அவ்வளவு மோசமாக இல்லை” என்று கூறினார்.

உலக வங்கியின் துருக்கி இயக்குநர் அகஸ்டே டானோ கோமே, “பாரதம் மிகப்பெரிய லட்சியம் கொண்டுள்ள நாடு. பொருளாதாரத்தை வலுப்படுத்த அந்த நாட்டு அரசு பல விஷயங்களைச் செய்துள்ளது. அதனை மேலும் துடிப்பானதாக மாற்றுவதற்கு கடுமையாக உழைத்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நிகழும் நிதியாண்டில் பாரதத்தின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது நினைவு கூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here