வெவ்வேறு காலக்கட்டத்தில் திருடப்பட்ட பழங்கால நடராஜர், ஆலிங்கன மூர்த்தி மற்றும் புத்தர் சிலை என மூன்று கல் மற்றும் வெண்கல சிலைகளை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலைகள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஏல நிறுவனங்களில் இருந்து மீண்டும் பாரதம் திரும்பக் கொண்டுவரப்பட உள்ளது. தற்போது கண்டறியப்பட்ட சிலைகளில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் கோயிலில் 1972ம் ஆண்டு திருடப்பட்ட நடராஜப் பெருமானின் வெண்கலச்சிலை, பெரம்பலூர் மாவட்டம் கோயில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ தோளீஸ்வரர் கோயிலில் ஆலிங்கன மூர்த்தி சிலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரப்பாக்கத்தைச் சேர்ந்த புத்தர் சிலை ஆகியவை அடங்கும். சிலைகள் பாரதத்தை சேர்ந்தவைதான், இங்கிருந்து திருடப்பட்டவைதான் என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்களை சேகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றை மீண்டும் பாரதம் கொண்டு வருவதற்கான ஆவணங்களை தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தயாரித்து வருகிறது. அதற்கான ஆவணங்கள் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.