சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்

0
190

ஆருத்ரா (திருவாதிரை) நட்சத்திரம் சிவபிரானுக்குரிய நட்சத்திரம். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபிரான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திருநடனத்தை ஆடிக் காண்பித்தார். இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம். எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் மற்றும் உலகமுழுக்க உள்ள சிவாலயங்களிலும், ஆதீனங்கள் சார்ந்த மடாலயங்களிலும் இன்று ஆருத்ரா தரிசனம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நால்வகைப் பேறுகளையும் பெற தேவாரம் ஓதுதல் சுலபமான வழி. பாரதப் பண்பாட்டின் உயரிய ஆன்மீக நிலையைச் சுட்டிக் காட்டும் ஒப்பற்ற பக்தி இலக்கியம் தேவாரம். தேவாரத்தில் அப்பர் அருளிய முக்கியமான பத்துப் பாடல்களைக் கொண்ட திருவாதிரைப் பதிகம் ஆருத்ரா தரிசன ஆனந்தத்தால் விளைந்த ஒன்று.

இந்தப் பதிகம் எழக் காரணமாக அமைந்ததோ சம்பந்தரும் இவரும் சந்தித்துக்கொண்ட நன்னாள். ‘ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!’, என சம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப் பெருமையை ஒரு பதிகம் பாடி அப்பர் விவரித்து அருளினார். அந்தப் பதிகம் திருவாதிரைப் பதிகம் என்ற சிறப்புப் பெயரால் புகழ்பெற்று ஓதப்பட்டு வருகிறது. இதைப் பாடினால் பெண்கள் சுமங்கலிகளாய் தங்கள் கணவனுடன் ஒற்றுமையாய், புத்திர பௌத்திர பாக்கியங்களுடன் தளர்வறியா மனத்துடன் சுகவாழ்வு வாழ்வார்கள் என்பது ஐதீகம். இந்நன்னாளில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம் உத்ரகோசமங்கையில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது. மெல்லிய தன்மை கொண்ட மரகத கல்லினால் ஆன சிலை என்பதால் சிறு அதிர்வு ஏற்பட்டால் கூட சிலைக்கு சேதம் ஏற்பட்டுவிடும். இதனால் ஆண்டு முழுவதும் சந்தகாப்பினால் பூசப்பட்டிருக்கும் மரகத நடராஜரின் சிலையானது ஆண்டுக்கு ஒரு முறை இன்றைய தினத்தில் சந்தனம் கலையப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். சிவபிரானுக்கே ஆதிரையன் என்ற பெயர் உண்டு. ஆதிரையனின் அற்புத நடனத்தை நினைத்து சிவபிரானைத் துதித்து வணங்கி நலம் பெறுவோமாக. ரமண மஹரிஷி, சடைய நாயனார் ஆகியோரும் ஆருத்ரா தரிசன நாளன்று பிறந்தவர்கள். “திருவாதிரை ஒருவாய் களி” என்கிற சொலவாடை உண்டு. இன்று களி செய்து ஸ்ரீநடராஜ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here