சபரிமலைக்கு செல்ல விரும்பும் எட்டு வயது சிறுமியைச் சுற்றி நடக்கும் அழகிய கதையான ‘மாளிகாபுரம்’ கேரளா மட்டுமல்லாமல் பாரதம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகர் உன்னி முகுந்தன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட வேண்டும் என்ற தீவிர ஆசை கொண்ட ஒரு சிறிய கிராமத்துப் பெண்ணின் கதையை படம் விவரிக்கிறது. இந்த படத்தை கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சி பிரகிலேஷ் என்ற சி.பி.ஐ கட்சியின் உள்ளூர் நிர்வாகி ஒருவரும் பார்த்து சமூக ஊடகத்தில் பாராட்டி பதிவுகள் இட்டார். இதையடுத்து அவரது சமூக ஊடகத்தில் இணைந்துள்ள பலர் இதனை விமர்சித்தனர். சில சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் சிலர் அவரையும் அவரது கடையையும் தாக்கப் போவதாக மிரட்டினர். இந்நிலையில், பிரகிலேஷுக்கு சொந்தமான ஒளி மற்றும் ஒலி அமைப்புகள் கடை மீது சில மர்ம நபர்கள் இரவோடு இரவாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கடையின் அருகே வைக்கப்பட்டிருந்த புதிய பலகைகள், அலங்கார விளக்குகள் என அனைத்தும் சேதமடைந்தன. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.