கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் பாரதம் வந்துசென்ற நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான சத்ய நாதெல்லா நான்கு நாள் பயணமாக பாரதம் வந்தார். முக்கிய தலைவர்கள், தொழில் முனைவோர், மாணவர்களைச் சந்தித்து அவர் உரையாடி வருகிறார். இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். பாரதத்தின் டிஜிட்டல் கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்து அந்த சந்திப்பில் இருவரும் உரையாடினர். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “தொழில்நுட்பத்திலும் கண்டுபிடிப்பிலும் பாரதம் முன்னுதாரணமாக திகழ்கிறது. பாரதத்தின் இளைஞர்கள் இந்த உலகை மாற்றும் வல்லமைகொண்ட புதுமையான யோசனைகளைக் கொண்டிருக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார். இந்தச் சந்திப்புக் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சத்ய நாதெல்லா, “டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துவது பெரும் ஊக்கம் தருகிறது. பாரதத்தின் டிஜிட்டல் பயணத்தில் நாங்களும் எங்களது பங்களிப்பை அளிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சத்ய நாதெல்லா சந்தித்துப் பேசினார். மேலும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் நேற்று இஸ்ரோவுக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப உருவாக்கத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகி வருகின்றன. அந்த நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சத்ய நாதெல்லா, “பாரதத்தின் டிஜிட்டல் கட்டமைப்பு சிறப்பானது. தொழில்நுட்பம் சார்ந்து செலவிடுவதில் பாரதம் உலகின் முதல் 10 நாடுகளுள் ஒன்றாக உள்ளது. அதன்பொருளாதார வளர்ச்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாரதத்தை தனது முக்கியமான களமாக கருதுகிறது. பாரதத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரிய அளவிளான மேம்பாட்டு மையங்கள் உள்ளன. மேலும், மிகப் பெரும் தரவு மையங்களை இங்கு அமைக்க நாங்கள் முதலீடு செய்துள்ளோம். தொழில்நுட்பம் என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்க வழி செய்கிறது. ஒவ்வொருவரின் தனித்திறனை வெளிக் கொண்டுவர உதவுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தற்போது மிக முக்கியமானது. நமது வளர்ச்சி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். 2025ம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான செயலிகள் கிளவுட் முறையில்தான் செயல்படும். இதனால் கிளவுட் தொழில்நுட்பம் உலகில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.