இமயமலையில் உயரமான எல்லை பகுதிகளில் பணிபுரியும் வீரர்களுக்கு தேவை யான அத்யாவசிய பொருட்களை கொண்டு சென்று வழங்குவது, கண்காணிப்பு, தேவைப்பட்டால் எதிரிகளின் இலக்குகள் மீது குண்டுகளை வீசும் திறன் கொண்ட பல்வகை பயன்பாட்டு டுரோன்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையமான டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ளது. இந்த டுரோன்கள் சிக்கிம் மலைப்பகுதிகளில் 14,000 அடி உயரத்தில் பறக்கவிட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இந்த வகை டுரோன்களில் 5 கிலோ முதல் 25 கிலோ எடையுள்ள பொருட்களையும் கொண்டு செல்ல முடியும். 5 கி.மீ சுற்றளவு வரை இந்த டுரோன்கள் தானாக இயங்கும் திறன் படைத்தது. தேவையான இடங்களுக்கு சென்று பொருட்களை இறக்கிவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு தானாகவே வந்து சேரும். இது மகாராஷ்டிராவில் நடந்த 108வது அறிவியல் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. 30 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லும் வகையில் இந்த டுரோனை மேம்படுத்தும் பணிகளை டி.ஆர்.டி.ஓ மேற்கொண்டு வருகிறது.