இந்திய ராணுவத்தின் பெண் அதிகாரிகள் தொடர்பான சமீபத்திய ஒரு முன்னோடி நடவடிக்கையாக, பெண் அதிகாரிகள் 108 பேரை கர்னல்கள் பதவிக்கு உயர்த்த ராணுவம் முடிவு செய்துள்ளது. இவர்களின் பதவி உயர்வுக்கான பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறியாளர்கள், ராணுவ புலனாய்வு, ராணுவ வான் பாதுகாப்பு (ஏ.ஏ.டி), ஆயுதங்கள் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய ராணுவத்தில் கட்டளைப் பாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு இது ஒரு முதல் நிகழ்வாகும். பெண் ராணுவ அதிகாரியான கேப்டன் ஷிவா சௌஹான் சமீபத்தில் சியாச்சின் பனிப்பாறையில் பணியமர்த்தப்பட்ட சில நாட்களுளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராணுவ உயர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்திய ராணுவத்தின் பல்வேறு ஆபரேஷன் தியேட்டர் கமாண்டுகளில் பெண்கள் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றுகின்றனர். ஆண்களுக்கு இணையாக பெண் அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கர்னல் பதவியில் உள்ள கட்டளை பணிகளுக்கு பெண் அதிகாரிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.