1. சுதந்திர போராட்டத்தின்போது காந்தியடிகள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, 1932-ம் ஆண்டு ஜனவரி 11- ம் தேதி, திருப்பூரில் நடைபெற்ற ஊர்வலத்தில், பிரிட்டிஷ் காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டபோதும், தேசியக் கொடியை கீழே விட்டுவிடாமல், அடி தாங்கி கொடி காத்த தீரனாய் 28 வயதில் அமரரானவர்.
2. இயற்பெயர் குமாரசாமி. 1904-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். தந்தை நாச்சிமுத்து. தாயார் கருப்பாயி.
3. சுதந்திர போராட்டத்திற்குப் பெயர் கொடுத்தார் குமரன். தலைமை ஏற்க வேண்டிய செல்வந்தர் ஈஸ்வரமூர்த்தியைப் பெற்றோரும் உற்றாரும் தடுத்துவிட்டனர். 9 தொண்டர்களை மங்களவிலாசுக்கு அழைத்து வந்த பி.ஏ. சுந்தரம் நிலையைப் புரிந்துகொண்டார். தொண்டர்கள் சுந்தரத்தை தலைமை ஏற்கச் சொன்னார்கள்.
4. ஒன்பது பேரையும் அணிவகுத்து நிறுத்தினார் சுந்தரம். கையில் கதர்க்கொடி பிடித்து காந்தி மகானை மனதில் நிறுத்தி பாரததேவியின் கோவிலுக்குப் புறப்படும் பக்தனைப் போல் வீறுநடை போட்டார் குமரன்.
5. ‘வந்தேமாதரம்’ என்ற முழக்கம் வானை எட்டியது. ஊரார் திரண்டு வாழ்த்து கூறினர். காவல் நிலையம் வந்தது. முப்பது காவலர்களும் இரண்டு அதிகாரிகளும் பாய்ந்து வெளியே வந்தனர். அவர்களில் ஒருவர் மகமது. அவரே காவல்படைக்கு அங்கு தலைவர். தேசபக்தர்களைத் தேடிப்பிடித்து உதைப்பது அவருக்கு உகந்த செயல்.
6. மகமதுவும் மற்ற காவலர்களும் வெறி கொண்டு, தடியால் தாக்கினர். குமரனின் இடது காதுக்கு மேலே விழுந்த அடியில் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டது.
7. ‘வந்தேமாதரம்! வந்தேமாதரம்!’’ என்று சொன்ன குமரனின் வாய் ரத்தத்தால் நிறைந்தது. உயர்த்திப் பிடித்த கொடியோடு தரையில் வீழ்ந்தார். தாய்நாட்டுத் துரோகிகளாகிய காவலர்கள் கொடியைப் பிடுங்க முயன்றனர். ‘‘கொடியைப் போடுடா’’ என்று கூறிக்கொண்டே தாக்கிய கொடியவர்களின் அடியையும் தாங்கிக் கொண்டு கொடி அவர்கள் கையில் போகாவண்ணம் இறுக்கிப் பிடித்தார், குமரன். ஆத்திரமுற்ற கயமைக் காவலன் ஒருவன் குத்திட்டு நின்ற மண்டை ஓட்டின் மீது ஓங்கி அடித்தான். அடியால் அழுத்தப்பட்ட அந்த ஓடு, மூளையில் பாய்ந்து, செயலிழந்தது மூளை.
8. மண்ணில் வீழ்ந்தான் மாவீரன். கொடியவர் கூட்டமோ குமரனின் உடலை மிதித்தது. கொடியை மிதித்தது. ரத்தச் சேற்றில் அந்தக் கொடி அழுந்திக் கிடந்தது.
9. 1932 ஜனவரி மாதம் 11-ந் தேதி காலை 4 மணிக்கு உயிர் பிரிந்தது. ஆனால் இன்றும் என்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது குமரன் தன் உயிர்ச் சுடரால் ஏற்றிவைத்த தியாக தீபம்.