உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து எம்.வி கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பலின் முதல் பயணத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழித்தட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பாரதத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் உலகின் நீளமான நதி கப்பலாகும். வாரணாசியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ள கங்கா விலாஸ் கப்பல், 5 மாநிலங்கள் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் வழியாக 51 நாட்களில் 3,200 கி.மீ தூரம் பயணித்து அசாமின் திப்ருகர் துறைமுகத்தை சென்றடையும். கங்கா விலாஸின் இந்த முதல் பயணத்தில், அதன் முழு பயண தூரத்திற்கும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 32 பயணிகளும் ஒரு ஜெர்மன் நாட்டு வழிகாட்டியும் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் மொத்த பயண நாட்களான 51 நாட்களில், உலக பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கள், நதி படுகைகள், பல முக்கிய நகரங்கள் என 50 சுற்றுலாத் தலங்களை ஒருங்கே காணமுடியும். மேலும் பாரதம் மற்றும் வங்கதேசத்தின் கலை, கலாச்சாரம், வரலாற்றை தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கும். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உலகின் நீளமான எம்.வி கங்கா விலாஸ் கப்பலின் நீர்வழிப் பயணத்தை கங்கை நதியில் தொடங்கி வைப்பது மிகவும் முக்கியமான தருணம். இத்திட்டம் பாரதத்தின் சுற்றுலாவில் ஒரு புதிய யுகத்திற்கு அடிகோலும். கங்கா விலாஸில் தற்போது பணிக்கும் பயணிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பாரதத்தில் நீங்கள் சிந்திக்கும் அனைத்தும் உள்ளது. உங்கள் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் இங்கு உள்ளன. பாரதத்தை நம்மால் வார்த்தைகளில் வர்ணிக்கவும் வரையறுக்கவும் முடியாது. அதனை இதயத்தால் மட்டுமே உணர்ந்து அனுபவிக்க முடியும். ஏனெனில் பாரதம், நாடு, மதம், மொழி என அனைத்து எல்லைகளைக் கடந்து அனைவருக்காகவும் தனது இதயத்தை விசாலமாக திறந்து வைத்துள்ளது” என்றார்.