பாரதத்தின் வர்த்தகம், சேவைத்துறை இரண்டையும் சேர்த்து ஒட்டுமொத்த வெளிநாட்டு வர்த்தகம், 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 16.11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் உள்ளூர் தேவைகள் அதிகரித்ததன் காரணமாக இறக்குமதியும் 25.55 சதவீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு ரிசர்வ் வங்கியின் அடுத்த புள்ளிவிவர வெளியீட்டின் அடிப்படையில் திருத்தப்பட்டு வெளியிடப்படும். இந்த காலகட்டத்தில் வர்த்தகம் மற்றும் சேவைத்துறை ஏற்றுமதி 568.57 பில்லியன் அமெரிக்க டாலர் எனவும் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 686.70 பில்லியன் அமெரிக்க டாலர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக ஏற்றுமதி இந்த காலகட்டத்தில் 332.76 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 305.04 பில்லியன் டாலராக இருந்தது. இதே காலகட்டத்தில் சேவைத்துறை ஏற்றுமதி 235.81 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 184.65 பில்லியன் டாலராக இருந்தது. சேவைத்துறையின் இறக்குமதி 134.99 பில்லியன் டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 105.45 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது. மின்னணு பொருட்கள், அரிசி, பழங்கள், காய்கறிகள், இரும்புத்தாது உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்து காணப்பட்டது. எனினும், ஜவுளித்துறையின் ஏற்றுமதி முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தைவிட குறைந்துள்ளது.