அசாமின் கரீம்கஞ்சில் பஜ்ரங் தள அமைப்பின் செயற்பாட்டாளர் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பு, கடந்த 16 மற்றும் 17 தேதிகளில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இரண்டு நாள் போராட்டங்களை நடத்தியது. மேலும், முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டும் சில பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் மனு ஒன்றை சமர்ப்பிக்கவும் வி.ஹெச்.பி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வி.ஹெச்.பியின் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின், வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், “தேசம் முழுவதும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், சமூகத்தைச் சீர்குலைப்பதில் சில சக்திகள் மும்முரமாக உள்ளன. அசாமின் கரீம்கஞ்சில் 16 வயது பஜ்ரங் தள தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவரது ஒரே தவறு அவர் பஜ்ரங் தள செயற்பாட்டாளர் என்பதும் அந்த நேரத்தில் அவர் பஜ்ரங் தள முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார் என்பதும் தான். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. கடந்த 2 ஆண்டுகளில், பஜ்ரங்தளத்தின் 9 செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 32 பேர் ஜிஹாதிகளால் தாக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு மதிப்பளித்து மட்டுமே எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறோம். ஆனால் அதை எங்கள் பலவீனமாக கருதக்கூடாது. இளைஞர்கள் இதனை எதிர்த்து திரும்பி நின்றால் அதன் பொறுப்பு முழுவதும், முஸ்லிம் சமூகத்தை அர்த்தமற்ற முறையில் தூண்டிவிடும் அந்த அடிப்படைவாதிகளை சேர்ந்தது தான். முஸ்லிம் சமூகத்தை தூண்டுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.ஹெச்.பி, இது குறித்த ஒரு மனுவை பாரத குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்து, இந்த சித்தாந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், முஸ்லிம்களை தூண்டும் தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும். தடைசெய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ அமைப்பின் நிலவும் சித்தாந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் அமைதியான சகவாழ்வை நோக்கி செல்ல வேண்டும். சிமி பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு, அதன் ஆட்கள், பி.எப்.ஐ என்ற பெயரில் வேலை செய்யத் தொடங்கினர். இப்போது பி.எப்.ஐ தடைக்கு பிறகு இன்னொரு அமைப்பு களம் இறங்கியுள்ளது. இங்கு பெயர் முக்கியமில்லை, சித்தாந்தம்தான் முக்கியம். இந்த சித்தாந்தத்திற்கு முடிவு கட்ட வேண்டும். நாம் அமைதியான சகவாழ்வை நோக்கி நகர வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.