நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டும், விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்ற சிறப்பு தருணத்தை குறிக்கும் வகையிலும் மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து ராணுவ இசை, சாகசம் மற்றும் பழங்குடி நடனத் திருவிழாவான ஆதி ஷவுரியா- வீரத்தின் திருவிழா என்ற நிகழ்ச்சியை புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஜனவரி 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கடலோர காவல் படை ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படும்.
ஆயுதப் படை வீரர்களின் பேண்ட் வாத்திய நிகழ்ச்சிகள், கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் முதலியவையும், இந்தியா முழுவதும் உள்ள பழங்குடி கலாச்சாரத்தைப் பறைசாற்றும் நடன நிகழ்ச்சிகளும் திருவிழாவின்போது நடைபெறும். கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், லடாக், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பழங்குடி நடனக் கலைஞர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்துள்ளனர்.
விழாவிற்கான ஆயத்தப் பணிகளை மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஆர். ஜெயா நேற்று (ஜனவரி 19, 2023) நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு அமைச்சகம், பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்திய கடலோர காவல் படையின் அதிகாரிகளோடு அவர் ஆலோசனை நடத்தினார். விழா நடைபெற உள்ள இரண்டு நாட்களிலும் சுமார் 60 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://in.bookmyshow.com/ என்ற இணையதளத்தில் பார்வையாளர்கள் இலவசமாக தங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளலாம்.