வேலைவாய்ப்பு முகாமில் 71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளைக் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் வழங்கினார்

0
118
வேலைவாய்ப்பு முகாமில் அரசுத்துறையின் பல்வேறு நிறுவனங்களில் புதிதாக சேரவிருக்கும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை இன்று காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாகவே இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகின்றன. இளைஞர்களின் மேம்பாட்டுக்கு உதவி செய்து அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களது பங்களிப்பை வழங்கும் வகையில் இது அமையப்பெற்றுள்ளது.
 
புதிதாகப் பணியில் சேர உள்ளவர்களோடு பிரதமர் கலந்துரையாடினார்.
 
பிரதமரிடம் இருந்து பணிநியமன ஆணையை முதலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுப்ரபா பிஸ்வாஸ் என்பவர் பெற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சாப் தேசிய வங்கியில் பணியில் சேருவதற்கான நியமன ஆணையை பிரதமர் வழங்கினார். அவரோடு பிரதமர் கலந்துரையாடினார். பணி நியமனம் தொடர்பான அனைத்து நடடிவடிக்கைகளும் விரைவாக முடிக்கப்பட்டு பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். கல்வியை தொடர்வீர்களா என்று அவரிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். அவருடைய பணியில் டிஜிட்டல் முறையிலான நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக சுப்ரபா பிஸ்வாஸிடம் பிரதமர் திரு மோடி கேட்டுத் தெரிந்து கொண்டார். பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
 
ஜம்மு & காஷ்மிரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஃபெய்சல் ஷவுகத் ஷா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணையை பிரதமரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு பிரதமரோடு கலந்துரையாடிய ஃபெய்சல், தனது குடும்பத்திலிருந்து முதல் முறையாக அரசு வேலையை தான் பெற்றுக் கொண்டதைக் குறிப்பிட்டார். அரசுப்பணி கிடைக்கப் பெற்றதன் தாக்கம் குறித்து பிரதமர் அவரிடம் கேட்டார். அதற்கு அவர், எனக்கு அரசுப்பணி கிடைத்திருப்பது எனது நண்பர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தி அவர்களும் அரசுப்பணியில் சேருவதற்கு தயாராகி விட்டனர். மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சி வலைதளம் பயனுள்ள வகையில் அமைந்தது என்று ஃபெய்சல் தெரிவித்தார். ஃபெய்சல் போன்ற இளைஞர்களின் செயல்பாடுகள் ஜம்மு-காஷ்மீரை புதிய உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் பிரதமர் தனக்கு நம்பிக்கை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் கற்பதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ஃபெய்சலை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
 
குவகாத்தியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் அலுவலராக பணி நியமனத்தை மணிப்பூரைச் சேர்ந்த வாக்னி சாங்க் பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். வடகிழக்குப் பகுதியில் உள்ள சுகாதாரத்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை என்றும் தெரிவித்துள்ளார். முதல் முறையாக அரசுப்பணி நியமனம் பெற்ற குடும்பம் அவருடைய குடும்பத்திலிருந்து அரசுப்பணியில் சேர்ந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பணிநியமனம் தொடர்பான தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளில் அவருக்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டதா என்பதை பிரதமர் கேட்டறிந்தார். அவ்விதம் இருப்பின் அது குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவரிடம் பிரதமர் கேட்டார். தொடர்ந்து கற்பதை நிறுத்தப்போவதில்லை என்பதை இவரும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். பணி இடங்களில் பெண்களுக்கு பாலியில் ரீதியிலான தொந்தரவுகளுக்கு தீர்வு மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை அறிந்து கொண்டதாக பிரதமரிடம் தெரிவித்தார். வடகிழக்குப் பகுதியிலிருந்து வந்து பணிநியமனம் கிடைத்திருப்பதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அப்பகுதியின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிழக்கு ரயில்வேத் துறையில் இளங்கலை பொறியாளர் பணிநியமனம் பெற்ற பீகாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜு குமார், தான் கடந்து வந்த பாதை பற்றியும் வாழ்க்கையில் மேன்மையான இடத்தை அடைவது தான் தன்னுடைய இலக்கு என்பதையும் பிரதமரிடம் தெரிவித்தார். தன்னுடைய குடும்பம் மற்றும் தன்னுடன் பணியாற்றியவர்களின் ஆதரவு குறித்து நெகிழ்வுடன் பேசினார். அவர் கர்மயோகி பிராரம்ப் பயிற்சி வகுப்பில் 8 நிலைகளை முடித்ததன் விளைவாக நடத்தை விதிமுறைகள் மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்றவற்றின் மூலம் மிகப்பெரிய அளவில் பயன்பெற்றதாக அவர் கூறியுள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணித் தேர்வை எழுத போவதாகவும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார். அவருடைய இந்த பயணம் வெற்றிகரமாக அமைய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
 
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சியாளராக பணிநியமன ஆணையை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கண்ணமாலா வம்சி கிருஷ்ணா பிரதமரிடம் பெற்றுக் கொண்டார். அவருடைய கடின உழைப்பு மற்றும் அவருடைய பெற்றோர்களை எதிர்நோக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசினார். பணிநியமனம் பெற்றவர் தான் கடந்து வந்த நீண்ட நெடிய பயணம் குறித்தும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியதற்காக பிரதமருக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார். அலைபேசியின் மூலமே ஒருவர் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள முடிந்தது மிகவும் சுலபமாக இருந்தது என்றார். கண்ணமாலா வம்சி கிருஷ்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு மோடி, அவருடைய கல்வி கற்கும் ஆற்றலை தொடர்ந்து வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
இதனையடுத்து பணிநியமனங்களை பெற்றவர்களிடையே பேசிய பிரதமர், இந்த 2023-ம் ஆண்டின் முதல் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 71,000 குடும்பங்களுக்கு விலைமதிப்பற்ற பரிசாக அரசுப்பணி நியமனம் கிடைத்துள்ளது என்றார். புதிதாக பணிநியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அரசு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதன் மூலம் பணிநியமனம் பெற்றவர்களுக்கும், கோடிக்கணக்கான அவர்களது குடும்பங்களுக்கும் புத்தம் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் விரைவில் நடைபெற இருப்பதாகவும் அதன் விளைவாக லட்சக்கணக்கான புதிய குடுமபங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் கிடைக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். அசாம் மாநில அரசு நேற்று தான் இது போன்ற வேலைவாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது என்றும் மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் விரைவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உள்ளது என்றார். தொடர்ந்து நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாம் இந்த அரசின் குறியீடாக அமைகிறது என்றும் இந்த அரசு என்னென்ன தீர்மானங்களை செயல்படுத்தி வருவது குறித்து எடுத்துக் காட்டி வருவதாக கூறியுள்ளார்.
 
புதிதாக பணி நியமன ஆணை பெற்றவர்களின் முகங்களில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தாம் தெளிவாக காணமுடிவதாக பிரதமர் கூறினார். இவர்களின் பெரும்பாலானோர் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் எனவும் அவர்களில் பலர் கடந்த 5 தலைமுறைகளில் முதல் முறையாக அரசுப் பணியைப் பெறுபவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். வெளிப்படையான மற்றும் தெளிவான பணி நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு விண்ணப்பதாரர்களின் திறன்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறினார். மத்திய அரசுப் பணிகளைப் பொறுத்தவரை நியமன நடைமுறைகள் மேம்பட்ட வகையில் முறைப்படுத்தப்பட்டு, காலவரையறைக்கு உட்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
 
நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையும், வேகமும் தற்போது அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் காணப்படுவதாக அவர் கூறினார். முன்பு வழக்கமான பதவி உயர்வு, உள்ளிட்ட நடைமுறைகள் கூட மெதுவாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் நடைபெற்றதை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசு இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வெளிப்படையான நடைமுறைகளை உறுதி செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பணி நியமனமும், பதவி உயர்வும் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.
 
இன்று பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களுக்கு இது ஒரு புதிய பயணம் என்று குறிப்பிட்ட பிரதமர், அரசு இயந்திரத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருந்து பங்களிப்பை வழங்குவது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அவர்களும் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். புதிதாய பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், மக்கள் பணியாளர்களாக பொது மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் போது அவர்களது வாழ்விலும், தாக்கங்கள் ஏற்படும் என்று அவர் கூறினார். நுகர்வோர் எப்போதும் சரியானவர்கள் என வணிகம் மற்றும் தொழில்துறையில் கூறுவதைப் போல், மக்கள் சரியானவர்கள் என்ற தாரக மந்திரத்தை நிர்வாகத்தில், அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். இது சேவை மனப்பான்மையை அதிகரித்து வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். ஒருவர் அரசுத்துறையில் பணி நியமன ஆணை பெறுவது பணி அல்ல என்றும் அது அரசு சேவை என்றும் பிரதமர் தெரிவித்தார். 140 கோடி மக்களுக்கு சேவை வழங்கும் மகிழ்ச்சியை இது வழங்கும் என்றும் இது மக்கள் மத்தியில், நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
 
ஐகாட் தளத்தில் இணையதளம் வாயிலாக பல அரசு ஊழியர்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதைக் குறிப்பிட்ட அவர், இந்தத் தளம் அலுவல் ரீதியான பயிற்சிகளைத் தவிர தனிநபர் மேம்பாட்டுக்கான பல வகுப்புகளையும் கொண்டுள்ளது என்றார். தொழில்நுட்பத்தின் மூலமாக தாமகவே கற்றுக் கொள்வது இன்றைய தலைமுறையினருக்கு நல்ல வாய்ப்பு என்று அவர் கூறினார். இதற்கு தாமே ஒரு உதாரணம் என்று கூறிய பிரதமர், எப்போதும் கற்கும் நோக்கிலேயே தாம் செயல்படுவதாகவும் அந்த மனப்பான்மையை விட்டது இல்லை என்றும் தெரிவித்தார். சுயகற்றல் மனப்பான்மை கற்பவரின் திறன்களை மேம்படுத்தும் என்றும் அதன் மூலம் அவரைச் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் நாட்டின் திறன்களும் மேம்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
 
வேகமாக மாறிவரும் நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் சுயவேலைவாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார். வேகமான வளர்ச்சி, சுயவேலைவாய்ப்பை பெரிய அளவில் விரிவுப்படுத்துவதாகவும் இன்றைய இந்தியாவில் இது நன்கு உணரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
விரிவான உள்கட்டமைப்பு மேம்பாட்டு அணுகுமுறையுடன் கடந்த 8 ஆண்டுகளில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். ரூ.100 லட்சம் கோடி முதலீடு உள்கட்டமைப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், புதிய சாலைகள், உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் வேலைவாய்ப்புகளை எவ்வாறு அதிகரிக்கும் என்பதையும் எடுத்துரைத்தார். புதிய சாலைகள் மூலம் புதிய சந்தைகளும் உருவாகும் என்று அவர் தெரிவித்தார். புதிய சாலைகள் அல்லது ரயில்வே வழித்தடங்கள் விளை நிலங்களிலிருந்து உணவு தானியங்களை எளிதில் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்ல வகை செய்யும் என்றும் சுற்றுலாவும் இவற்றின் மூலம் வளரும் என்றும் அவர் தெரிவித்தார். இவை அனைத்துமே வேலைவாய்ப்புகளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
 
பாரத் நெட் திட்டம் ஒவ்வொரு கிராமத்திற்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குவதை எடுத்துரைத்த அவர், இதன் மூலமும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார். தொழில்நுட்பங்களில் அவ்வளவாக நிபுணத்துவம் இல்லாதவர்கள் கூட இவற்றின் பலன்களை உணரமுடியும் என்று அவர் கூறினார். இணையதள சேவைகளை கிராமங்களில் வழங்குவதன் மூலம் புதிய தொழில்முனைவு வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டார். 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் புத்தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அவர், இந்த வெற்றி உலகில் இளைஞர்களுக்கு மிகப் பெரிய அடையாளத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார்.
 
பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளவர்களின் பயணங்களையும், முயற்சிகளையும் பாராட்டிய பிரதமர், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளதற்கு வாழ்த்துத் தெரிவித்தார். அவர்களை இந்த இடத்திற்கு எது கொண்டு வந்துள்ளதோ அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய பிரதமர், தொடர்ந்து கற்றலையும் சேவை செய்வதையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொள்வதுடன் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஆற்றல் உடையவர்களாக உங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here