காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில், ஹிந்துக்களின் மிகமுக்கிய வழிபட்டு மற்றும் புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாகவும், சிவபெருமானின் இருப்பிடமாகவும் கருதப்படுகிறது. பிரதான அமர்நாத் குகைக்குள் சிவபெருமானின் அமர்நாத் பனி லிங்கம் காணப்படுகிறது. இயற்கையாக உருவான இந்த பனி லிங்கமானது மே முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் வளரும். இந்த நேரத்தில், அமர்நாத் பனி லிங்கத்தின் வருடாந்திர யாத்திரை மற்றும் திருவிழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகிறார்கள். இந்த சூழலில், ஒரு முன்னோடி திட்டமாக, அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், சந்தன்வாடி மற்றும் சங்கம் டாப் இடையே 11 கிலோமீட்டர் ஷேஷ்நாக் சுரங்கப்பாதை உட்பட, அனைத்து காலநிலைக்கும் உகந்த 22 கி.மீ தூர சாலையை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. கூடுதலாக, இந்த புதிய சாலையானது ஜம்முவில் இருந்து லடாக் நோக்கி ஸ்ரீநகர் நகரின் வழியாக செல்லும் பயணிகளுக்கும் உதவும். இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், 10.8 கிமீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசகரைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்மொழிவுகளை வெளியிட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு கட்டுமானப் பணிகள் துவங்கப்படும். திட்ட அறிக்கை தயாரிக்க 10 மாதங்களும் கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகளை மேற்கொள்ள இரண்டு மாதங்களும் சாலை அமைப்பதற்கு 60 மாதங்களும் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லிடர் பள்ளத்தாக்கின் தொலைவில் ஒரு குறுகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அமர்நாத் ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு நடந்தோ அல்லது குதிரைகள் மூலமாகவோ மட்டுமே சென்றடைய முடியும். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள பஹல்காம் மற்றும் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு வழித்தடங்களில் யாத்ரீகர்கள் அங்கு செல்ல முடியும். பால்டால் பாதையானது பால்டலில் இருந்து குகை கோயிலுக்கு செல்லும் செங்குத்தான, வளைந்த மலைப்பாதையில் 14 கி.மீ தூர மலையேற்ற பயணமாகும். ஒரு நாளில் கடந்து செல்ல முடியும். குறுகிய தூரம் என்பதால் பெரும்பாலான மக்கள் இந்த வழியை நாடுகின்றனர். மற்றொன்று பஹல்காம் பாதை. இது குகையிலிருந்து 46 கி.மீ தொலைவில் உள்ளது இரவுகளில் தங்கி செல்ல சுமார் 4 நாட்கள் ஆகும். இது ஒரு நீண்ட பயணம் என்றாலும், இது சற்று எளிதாக இருக்கும்.