களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயில் தெப்ப உற்சவ கால் நாட்டு விழா, களக்காடு காவல் நிலையம் அருகில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளத்தின் அருகில் வேறு இடத்தில் கால்நாட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வரும் 3ம் தேதி தெப்ப உற்சவ கால்நாட்டு விழா நடைபெற உள்ளது. பாரம்பரிய முறைப்படி பழைய இடத்திலேயே கால்நாட்டு விழாவை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஜெச்.பி) அமைப்பினர் சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயிலில் அமர்ந்து தியான போராட்டத்தில் ஈடுபட்டனர். வி.ஹெச்.பி கோயில் மடங்கள் பிரிவு மாநில இணை அமைப்பாளர் சுப்பையா இதற்கு தலைமை தாங்கினார்.இதேபோல, அம்பை அரசு மருத்துவமனை முன்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில், அரசு மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும். வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். புறநோயாளிகளுக்கான பெயர் பதிவு செய்வதற்கு கையூட்டு பெறும் வீடியோ பரவியது. இதுகுறித்து உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.