பாரதத்தின் சிரஞ்சீவி

0
163

பராக்ரம் திவஸ் என தேசமெங்கும் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜிபி மகளிர் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். மணிப்பூரில் உள்ள இன்டலெக்சுவல் ஃபோரம் ஆஃப் நார்த் ஈஸ்ட் (IFNE) நடத்திய ‘நேதாஜி, ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் & இந்தியன் ஃபிரீடம் ஸ்டிரகிள்’ என்ற தலைப்பில் பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள், நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகத்தான உத்வேகத்தை அளிக்கும் மாபெரும் தலைவரின் துணிச்சலுக்கு ஏற்ற வகையில், அந்த நாளை பராக்கிரம் திவாஸ் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மணிப்பால் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில், முன்னாள் அமைச்சரும், பல்கலைக் கழகத்தின் கட்டடக் கலைஞருமான டி.ஏ.பாய், ‘ஆபரேஷன் லீடர்ஷிப் டெவலப்மென்ட்’ என்ற ஒரு திட்டத்தின் கீழ் இளைஞர்களின் சின்னம் யார்? என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியிருந்தார். சாதாரணமாக யாராவது சினிமா நட்சத்திரத்தை தான் இளைஞர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என கருதப்பட்டது. ஆனால் முடிவுகள் வேறுவிதமாக வந்தன. அதில் வந்த இரண்டு பெயர்கள் ‘சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’. அவர்களின் சரியான தேர்வுக்காக, நமது விவேகமுள்ள இளைஞர்களுக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிப்போம். வரலாற்றின் பக்கங்களில் நமது இளைஞர்களின் தியாகமும், துறவும் நிறைந்துள்ளது. “உங்கள் நாளைக்காக எங்களின் இன்றைய நாளை தியாகம் செய்கிறோம்,” இவ்வாறு மொய்ராங்கில் உள்ள ஐ.என்.ஏ நினைவுச்சின்னம் கூறுகிறது. பலர் இன்றும் தங்கள் குழந்தைகளுக்கு நேதாஜியின் பெயரை சூட்டுகின்றனர். மேலும் பலர் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்ரீராமர், கிருஷ்ணர், சத்ரபதி சிவாஜியின் பெருமைகளை போர்றும் விதத்தில் பெயரிடுகிறார்கள். இந்த பாரம்பரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் இந்த தேசம் என்றும் பெரிய மனிதர்களை போற்றுகிறது. கௌதம புத்தர் எல்லாவற்றையும் தியாகம் செய்து உண்மையையும் உயர்ந்த அறிவையும் தேடிச் சென்றார். புத்தர் அரியணை ஏறியிருந்தால் இன்று அவரை யாரும் நினைவு கூர்ந்திருக்க மாட்டார்கள்.

நேதாஜி தனது காலத்தில் ஐ.சி.எஸ் என்ற மிகவும் மதிப்புமிக்க வேலையைப் பெற்றபோதும் அதை விட்டுவிட்டார். இதுகுறித்து, தனது சகோதரருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் சுவாமி விவேகானந்தரை தனது உந்துதலாகக் குறிப்பிட்டார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், “ஒரு பாரத குடிமகனாக நான் ஐ.சி.எஸ்’சை எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பணியாக கருதவில்லை” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பாரதம் திரும்பிய அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது தேசப்பற்று காரணமாக அவர் வாழ்நாளில் 11 முறை சிறைக்கு அனுப்பப்பட்டார். ஒவ்வொரு முறை அவர் சிறையில் இருந்து வெளிவரும் போதும் அவரது வைராக்கியம் குறையவில்லை, அவர் மனதில் இருந்த நெருப்பு அணையவில்லை. பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் 1931 மார்ச் 23 அன்று தூக்கிலிடப்பட்டபோது, ஒட்டுமொத்த தேசமும் சோகத்தில் ஆழ்ந்தது. இது நடந்தபோது, நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு சவால் விடுவேன் என்று சபதம் எடுத்தார். அன்றைய காலகட்டத்தில் பாரத சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் குடையாக ஐ.என்.சி இருந்தது. நாரம்தால், கரம்தால் மற்றும் ஹிந்துஸ்தான் குடியரசு சங்கம் சந்திர சேகர் ஆசாத் போன்றவர்கள் புரட்சிகர பாதையை எடுத்தனர்.

இந்த நாட்டின் புரட்சிகர இயக்கத்தின் வரலாறு முழு உலகிலும் தனித்துவமானது. புரட்சிகரச் செயல் உலகம் முழுவதும் தேசப்பற்றுச் செயலாக அங்கீகரிக்கப்பட்டது. துர்கா தாஸ் எழுதிய புத்தகம், பட்கே, ராஜ்குரு போன்ற மாபெரும் புரட்சியாளர்கள் தாங்களாகவே மிகவும் ஆன்மீகத்தில் இருந்ததாக விளக்குகிறது. பகத் சிங் போன்றவர்கள் ஆர்ய சமாஜத்துடன் தொடர்புடையவர்கள். சுவாமி விவேகானந்தரும் நிவேதிதாவும் இந்தப் புரட்சியாளர்களுக்கு ஊக்கமளித்தனர். திலகர் எழுதிய கீதா ரகசியம்; கர்ம யோகத்தை எடுத்துக்காட்டுகிறது. சாவர்க்கரும் ஒரு சிறந்த ஆன்மீக ஆளுமையாக இருந்தார், அதே போல் அரவிந்தரும் ஒரு புரட்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் மகரிஷி அரவிந்தராக ஒரு ஆழமான ஆன்மீக வாழ்வில் இணைந்தார். இவ்வகையில் பாரத சுதந்திரப் போராட்டத்தில் ஆன்மீகத்தின் ஆழமான முத்திரை தனித்துவமானது. நேதாஜியும் இதற்கு விதிவிலக்கல்ல. நேதாஜி, காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். நாட்டின் எதிர்காலப் பொருளாதாரக் கண்ணோட்டத்தைத் திட்டமிடும் திட்டக் குழுவில் இருந்தார். நேருவால் தலைவராக நியமிக்கப்பட்டார். நேதாஜி, காங்கிரஸ் கட்சியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக விஸ்வேஸ்வரய்யாவை நியமித்தது என்பது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது” என கூறினார்.

1939 திரிபுரி காங்கிரஸில் காந்திஜியால் ஆதரித்த வேட்பாளர் பட்டாபி சீதாராமையா எப்படி தோற்கடிக்கப்பட்டார் என்பதை நினைவு கூர்ந்த தத்தாத்ரேய ஹொசபளே, “மேலிடத்தின் அழுத்தம் காரணமாக நேதாஜி காங்கிரஸ் தலைவராக தொடர முடியவில்லை. நேதாஜி, ஃபார்வர்டு பிளாக்கை அமைத்து தனது சொந்த பாதையை தேர்ந்தெடுத்தார். அப்போதும் அவர் எதையும் குறை கூறவில்லை. நேதாஜியின் தலைமை மிகவும் பிரபலமானது. சிறையில் இருந்தபோதும் அவர் கொல்கத்தா மேயர் பதவியை வென்றார். 1939 வாக்கில், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தின் காரணமாக அரசியல் அடிவானம் மாறியது. இதில் ஆங்கிலேயர்கள் முக்கிய பங்கு வகித்தனர். எதிரி பலவீனமாக இருக்கும்போது அடிப்போம், எதிரியின் எதிரி நண்பன் என்பது நேதாஜியின் கொள்கை. ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைக்கவும், போருக்குப் பிறகு சுதந்திரம் பெறவும் காங்கிரஸ் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. நேதாஜி சிறையில் நோய்வாய்ப்பட்டார். நேதாஜி சிறையில் இறந்தால், அது அவர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தனர். இதனால் அவர் விடுவிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 16 ஜனவரி 1941 அன்று, ஜியாவுதீன் வேடத்தில் அவர் தப்பித்து இன்றைய ஜார்கண்ட், பெஷாவர், ரஷ்யா வழியாக ஜெர்மனியையும் பின்னர் இத்தாலியையும் அடைந்தார். நாசிசம் மற்றும் பாசிசம் இரண்டிலிருந்தும், அவர் தேச சுதந்திரத்திற்கான வாய்ப்புகளைப் பெற முயன்றார். நேதாஜி ஒரு பாசிஸ்ட்டும் அல்ல, ஒரு கம்யூனிஸ்ட்டும் அல்ல. ஒரு தேசியவாதி.

நேதாஜி ஒரு அச்சமற்ற ஆளுமை. ஹிட்லருக்கு முன்பாகவே அவரது ‘மெய்ன் காம்ப்’ புத்தகத்தில் இருந்து பாரதத்தைப் பற்றிய தவறான வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி, ஹிட்லர் குறிப்பிட்டது சரியல்ல என்று தைரியமாகச் சொன்னார். ஹிட்லரே தனது அடுத்த பதிப்பில் இந்த வார்த்தைகளை சரிசெய்வதாக நேதாஜிக்கு உறுதியளித்தார். தேச நலனுக்கு நேதாஜி எப்படி முன்னுரிமை அளித்தார் என்பதை இது காட்டுகிறது. அவர் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தென்கிழக்கு ஆசியாவிற்குச் சென்று இறுதியாக மார்ஷல் டோஜோவைச் சமாளிக்க ஜப்பானை அடைந்தார். ஜப்பானின் உதவியுடன் ஐ.என்.ஏவை உருவாக்கினார். நேதாஜியின் ஆற்றல் மிக்க ஆளுமை காரணமாக ராஸ் பிஹாரி போஸ் ஐ.என்.ஏவின் உச்ச தளபதி பதவியை அவருக்கு வழங்க ஒப்புக்கொண்டார். ‘உங்கள் ரத்தத்தை கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்’ என்றார். அவர் தனது பணிக்காக ஆசீர்வாதம் பெற காந்திக்கு செய்தி அனுப்பினார். யாருக்காக அவர் காங்கிரசை விட்டு வெளியேறினாரோ அதே மனிதர் மீது அளவற்ற அன்பும் கொண்டிருந்தார். ஆழ்ந்த ஆன்மிக உணர்வினால் அந்த பெருந்தன்மை அவருக்குள் வந்தது. அந்த நாட்களில் பாரதப் பெண்கள் அதிகபட்சமாக வீட்டிற்குள் திரைக்குப் பின் இருந்தனர். ஆனாலும் அவர்களுக்காக ஒரு படைப்பிரிவை உருவாக்கி அதற்கு ராணி லக்ஷ்மி ரெஜிமென்ட் என்று பெயரிட்டார். ஐ.என்.ஏவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பிரிவுகளும் இருந்தன. புகழ்பெற்ற “கதம் கதம் பதயே ஜா” எழுதிய அவரது படையில் கவிஞர்கள், சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் கூட இருந்தனர்.

மணிப்பூரை சேர்ந்த பொது மக்கள், சக்திவாய்ந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக போராடுவதற்காக தங்கள் சொந்த வீட்டை விட்டு மலைகள் மற்றும் காடுகளுக்கு சென்றார்கள். ஐ.என்.ஏவின் பகதூர் குழுவைச் சேர்ந்த கர்னல் மாலிக் என்பவர் மொய்ராங்கில் உரையாற்றி சுதந்திர பாரதத்தின் கொடியை ஏற்றினார். ஐ.என்.ஏவில் ரேஷன் பிரச்சனை இருந்தது. அனைத்து தரப்பு மக்களும் ஐ.என்.ஏவுக்கு பங்களித்தனர். பெண்கள் கூட தங்கள் ஆபரணங்களை விற்று ஐ.என்.ஏவிற்காக நிதி திரட்டினர். அந்தமான் நிக்கோபார் தீவுகள் விடுவிக்கப்பட்டு சுவாதின் மற்றும் ஸ்வராஜ் என்று பெயரிடப்பட்டது அவரது ஆளுமையை வெளிப்படுத்தியது. சுதந்திர பாரதத்தின் பிரதமராக நேதாஜியை பதினொரு நாடுகள் அங்கீகரித்தன. துரதிர்ஷ்டவசமாக, நேதாஜியால் டெல்லியை அடைய முடியவில்லை. பாதகமான சூழ்நிலைகள் காரணமாக தங்களால் இனி உதவ முடியாது என்று நேதாஜியிடம் ஜப்பான் தெரிவித்தது.

ஆகஸ்ட் 23, 1944 அன்று நேதாஜி ரஷ்யாவுக்குப் புறப்பட்டபோது விமான விபத்து ஏற்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் நேதாஜியின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். அரசாங்கத்தால் கமிஷன்கள் அமைக்கப்பட்டன, ஆனால் அவரது துயர மரணத்தின் நம்பகத்தன்மையை அறிக்கைகளால் நிறுவ முடியவில்லை. நேதாஜியின் அசாதாரண பங்களிப்புகளால் அவர் பண்டைய சிரஞ்சீவிகளான வியாசர், பரசுராமன், அனுமான் போன்ற மற்றொரு சிரஞ்சீவியாக என்றென்றும் நினைவுகூரப்படுவார்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here