இந்திய விமானப் படையின் புதிய துணைத் தலைவராக போர் விமானியான ஏர் மார்ஷல் ஏ.பி சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்ற பிறகு, தேசிய போர் நினைவிடத்தில் தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். டெல்லியில் உள்ள உள்ள விமானத் தலைமையகமான வாயு பவனில் அவருக்கு சம்பிரதாய மரியாதையும் வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் சந்தீப் சிங்கைத் தொடர்ந்து ஏ.பி சிங் இந்த பதவியை ஏற்றுள்ளார். நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி, டிஃபென்ஸ் சர்வீசஸ் ஸ்டாஃப் காலேஜ் மற்றும் நேஷனல் டிஃபென்ஸ் காலேஜ் ஆகியவற்றின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல் ஏ.பி சிங், 21 டிசம்பர் 1984 அன்று இந்திய விமானப் படையில் இணைந்தார். விமான அதிகாரி, ஒரு தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர் மற்றும் ஒரு சிறந்த சோதனை விமானி என பல்வேறு பணிகளை திறம்பட செய்து அனுபவம் பெற்றவர். அவரது பணியின் போது, அதிகாரியாக ஒரு செயல்பாட்டு போர் படை மற்றும் ஒரு முன்னணி விமான தளத்திற்கு கட்டளையிடும் பொறுப்பையும் செம்மையாக நிறைவேற்றினார். சோதனை பைலட்டாக, அவர் ரஷ்யாவின் மாஸ்கோவில் மிக் 29 மேம்படுத்தல் திட்ட மேலாண்மை குழுவையும் வழிநடத்தியுள்ளார். லகுரக தேஜாஸ் போர் விமானத்தின் விமான சோதனையை கவனித்து வரும் தேசிய விமான சோதனை மையத்தில் திட்ட இயக்குனராகவும் இருந்துள்ளார். இதைத்தவிர, தென்மேற்கு விமானக் கட்டளையில் விமானப் பாதுகாப்புத் தளபதி மற்றும் கிழக்கு விமானக் கட்டளையில் மூத்த விமானப் பணியாளர் அதிகாரி ஆகிய முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவர்.